Saturday, September 21, 2024
Home » சவுக்கு மண்டலமாகும் பண்ருட்டி

சவுக்கு மண்டலமாகும் பண்ருட்டி

by Porselvi

சேலம் என்றால் மாம்பழம் நினைவுக்கு வருவது போல பண்ருட்டி என்றால் பலாப்பழம் நினைவுக்கு வரும். பலாப்பழத்தைப் போல முந்திரியும் இங்கு ஃபேமஸ்தான். இவை இரண்டைத் தவிர இன்னொரு பயிரும் இங்கு ஃபேமஸாக இருக்கிறது. அது சவுக்குதான். பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏக்கர் கணக்கில் சவுக்கு பயிரிடப்படுகிறது. சில இடங்கள் சவுக்கு மண்டலமாகவே காட்சி அளிக்கும். அதுபோன்ற ஒரு பகுதிதான் பலாப்பட்டு. பண்ருட்டியில் இருந்து அரசூர் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த ஊரைச் சுற்றி பல விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் கலக்கி வருகிறார்கள். இத்தகைய பலாப்பட்டு பகுதியில் தனது 3 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சவுக்கு சாகுபடியில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் என்பவரைச் சந்தித்தோம். “மரத்தில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் தேக்கு மரத்தைத்தான் தேர்வு செய்வார்கள். சவுக்கு மரம் உப்புநீரிலும் விளையக்கூடியது என்பதால் நான் சவுக்கு மரத்தைத் தேர்வு செய்தேன். சவுக்கு மரத்தில் 4 முதல் 5 ரகங்கள் உள்ளன. அதில் சிஎச்- 5 (CH5) என்ற ரகம் இரண்டிலிருந்து 3 ஆண்டுக்குள் வளர்ந்து ஓரளவிற்கு நல்ல வருமானத்தைத் தரும். இது நாட்டு ரகம் போன்றது. ஆனால் விரைவாக வளர்ந்து பலன் தரும்.

பண்ருட்டி அருகே வேகாக்கொல்லை என்ற கிராமம் இருக்கிறது. இங்குள்ள ஒரு நர்சரியில் இருந்து சிஎச்-5 ரக சவுக்கு கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்தேன். நான் இதை முழுக்க முழுக்க இயற்கை முறையில் பயிர் செய்து வருகிறேன். சவுக்கு சாகுபடிக்கு முன்னதாக நிலத்தில் சணப்பை அல்லது பலதானியப் பயிர்களை விதைத்து மடக்கி உழவு செய்வேன். இதன்மூலம் நிலத்திற்கு நல்ல தழைச்சத்து கிடைக்கும். அதிலும் பல வகையான தானியப் பயிர்களை விதைத்து மடக்கி உழும்போது நிலத்திற்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். இதைத்தொடர்ந்து மேலும் நன்றாக உழவு செய்து செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை 4 அடி என்ற இடைவெளியில் அரை அடிக்குக் குழி எடுத்து சவுக்குக் கன்றுகளை நடுவேன். நடவுக்குழியில் உரம் மற்றும் மண் கலவை போடுவேன். பின்னர் நடவை மேற்கொள்வேன். நடவு செய்ததில் இருந்து 25 நாட்களுக்கு ஒருமுறை கன்றுகளைச் சுற்றி மண்ணை அழுத்தி விடுவேன். சவுக்குக் கன்றுகளை நட்டதிலிருந்து 3 மாதம் வரை வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதற்குப் பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். இதற்கு குறைந்த அளவிலான நேரமும், தண்ணீரும் செலவாகிறது. மழைக் காலங்களில் நாம் தண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை.

8வது மாதத்தில் சவுக்கு மரம் 7 லிருந்து 8 அடி உயரம் வரை வளர்ந்து விடும். எனது வயலில் நடவு செய்துள்ள மரங்கள் 10 மாத வயதுடையவை. ஒவ்வொரு மரமும் கிட்டத்தட்ட 10 அடி உயரம் வளர்ந்திருக்கிறது. வெயில் காலங்களில் மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் விடுவேன். மழைக் காலங்களில் இதுவும் தேவைப்படாது. மணல் அதிகம் கலந்து நடவு செய்துள்ளதால் தண்ணீர் முழுவதுமாகவே நிலத்தில் இறங்கிவிடும். ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்து விட வேண்டும். அதன்பின்னர் இடை உழவு செய்து களைச்செடிகளை அகற்ற வேண்டும். மரத்தில் பக்கவாட்டுக் கிளைகள் வளர்ந்தால் அதனை அகற்றி விட வேண்டும். இதனால் மரம் நன்கு செங்குத்தாக வளரும். இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் மரம் நன்கு வளர்ந்தவுடன் அதனை வெட்டினால் ஏக்கருக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் வரை வருமானம் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன். 3 ஏக்கரில் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதில் அதிக செலவுகள் கிடையாது. 3 ஏக்கருக்கு எப்படியும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் செலவாகும். அதுபோக ரூ.6 லட்சம் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். சவுக்கு மரம் போக 30 சென்ட் நிலத்தில் இஞ்சி பயிர் செய்திருக்கிறேன். பஞ்சகவ்யம், மீன் அமிலம், கண ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல், அரப்புமோர் கரைசல், ஆட்டு உரம் மற்றும் தொழு உரங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலமும் ஒரு சராசரியான வருமானம் கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ஆறுமுகம்: 96559 50696.

* காகித ஆலைகளுக்கு சவுக்கு மரம் அதிகளவில் தேவைப்படுகிறது. இதனால் அந்த ஆலைகளுக்கு அறுவடை செய்யப்படும் சவுக்கு மரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

*வீடு கட்டுமானப் பணிக்கான சென்ட்ரிங் பலகைகள் தயாரிப்பதற்கும், காற்றில் வாழை மரங்கள் சாயாமல் இருப்பதற்காக முட்டு கொடுப்பதற்காகவும் சவுக்கு மரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. நல்ல அகலமான சவுக்கு மரங்களை ப்ளைவுட்டாக மாற்றி கதவுகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

* பலாப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சவுக்கு பயிரிடப்படுவதால், இப்பகுதியில் மர வியாபாரிகள் அதிக அளவில் வலம் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் நன்றாக வளர்ந்து நிற்கும் சவுக்குத்தோப்புகளைப் பார்த்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து உரிய விலை கொடுத்து மரங்களைக் கொள்முதல் செய்துகொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மரங்களை விற்பதற்கு சிக்கல் எதுவும் இருப்பதில்லை.

You may also like

Leave a Comment

eleven + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi