Friday, September 20, 2024
Home » மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!

மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!

by Nithya

நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே அம்பிகை. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட தேவியை சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்கு நான்கு வடிவங்களாக அருள் புரிகின்றது. இதற்கு சதுர்த்த வடிவங்கள் என்று பெயர். பராசக்தி சிவபெருமானின் இடப்புறத்தில் வீற்றிருக்கும் போது ‘பவானி’ என்று பெயர் பெறுகிறாள். ஆண் வேடம் தாங்குகையில் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறாள். பெண் உருவம் கொள்ளும்போது ‘வைஷ்ணவி’ என்றும், அசுரர்களை அழிக்கும் போது ‘காளி’ என்றழைக்கப்படுகிறாள். போர்களத்தில் போரிட்டு வெற்றிச் செல்வியாகத் திகழ்பவளை துர்கை என்கிறோம். இவையே தேவியின் சதுர்த்த வடிவங்களாகும்.

பவானி: தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கும் ஸ்ரீபெரியபாளையத்தம்மன் ‘ஸ்ரீபவானி’ என்று அழைக்கப்படுகிறாள். ‘பவானி’ என்றால் ‘உயிர் கொடுப்பவள்’ என்று பொருள். கருணா மூர்த்தியாய் விளங்கும் ஸ்ரீபவானியை, மராட்டியர்கள் தங்களின் குல தெய்வமாய் வழிபட்டார்கள். மகாராஷ்டிராவில் உள்ள ‘துல்ஜாபூரில்’ அன்னை பவானி திருக்கோயில் உள்ளது. 12ம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட இத்திருக்கோயிலில் தன் எட்டுக் கரங்களில் ஆயுதங்களை ஏந்தி பளிங்குச்சிலையில் வீற்றிருக்கிறாள் அன்னை பவானி.

துல்ஜாபூர் ஆலயம் யமுனாசலா என்ற குன்றில் அமைந்துள்ளது. படிகளில் ஏறி கோயிலை அடைந்ததும் ‘கல்லோலா’ என்ற பெரிய திருக்குளத்தைக் காணலாம். இத்திருக்கோயில் விஸ்வகர்மாவால் கட்டப்பட்டதென்றும், பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, எல்லா புண்ணிய நதிகளும், ‘கல்லோலா’ தீர்த்தத்தில் வசிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்த தீர்த்தத்தை கண்களால் பார்த்தாலே நம் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இங்குள்ள மற்றொரு கோமுக் தீர்த்தத்தில் கங்கையே வசிப்பதாக புராணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் நடு மண்டபத்தில் அன்னை வலது காலை மஹிஷனின் தலை மீது வைத்து வாகனத்தில் அமர்ந்து தன் எட்டுக் கரங்களிலும் ஆயுதங்களை தரித்து, உடலில் ஆபரணங்களை அணிந்து, பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறாள்.

இந்த தேவியின் சக்தியை பறைசாற்றும் சரித்திர நிகழ்வு ஒன்றுள்ளது. முகலாய மன்னர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் சிவாஜியை, எதிர்த்து பீஜப்பூர் தளபதியான அப்ஸல்கான் படையெடுத்தான். சிவாஜியை வெற்றி கொள்ள முடியாததால், துல்ஜாபூரில் உள்ள அவரின் குல தெய்வ கோயிலை சிதைத்தான். அன்றிரவு அவனுக்கு அசரீரி கேட்டது. அதில் மூன்று வாரங்களில் அவன் இறந்து விடுவதாக கூறியது. அதனால் அப்ஸல்கான் சிவாஜியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருவதாக சூளுரைத்தான். ஆனால் அசரீரி சொன்னது போல் அவன் கொலையுண்டான்.

வைஷ்ணவி: விஷ்ணு அம்சமுள்ளவள். மகாவிஷ்ணுவின் சகோதரி என்பதால், நாராயணி என்ற பெயரும் உண்டு. தேவர்களுக்கு அச்சத்தைத் தந்த அரக்கர்களை அழித்த மஹா சக்தியாகவே அவளை எங்கும் வர்ணித்திருக்கிறார்கள். காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி ஆலயம் ஒரு குகைக் கோயில். இங்கு மஹாகாளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி என மூன்று தேவிகளுக்கும் சன்னதி உள்ளது. தேவியின் ஆலயம் செல்ல மலை உச்சிக்கு ஏறித்தான் செல்ல வேண்டும்.

இங்கு செல்லும் பக்தர்கள் ‘ஜெய் மாதா’ என்று கோஷம் எழுப்பியபடி தரிசிப்பார்கள். வைஷ்ணவி தேவியை தரிசிக்கும் முன் அங்குள்ள தடாகத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். மேலும் தேவி ஸ்ரீராமபிரானின் ஆணையின்படி அவரின் கல்கி அவதாரத்தைத் தரிசிக்க தவம் செய்து கொண்டிருப்பதாக புராணங்களில் கூறப்படுகிறது.

ரத்னாஸாகருக்கு பெண்ணாகப் பிறந்த வைஷ்ணவி தென்னிந்தியாவில் வனவாசம் செய்த ஸ்ரீராமனை சந்தித்தாள். அவருடன் இருக்க விரும்பினாள். ராமர் அவளிடம், ‘‘சீதையை மீட்கச் செல்கிறேன். வரும் வழியில் உன் குடிசையை கடந்து செல்வேன். அப்போது நீ என்னை யாரென்று தெரிந்து கொண்டால் என்னுடன் தங்கலாம்’’ என்றுள்ளார். ராமர் திரும்பி வருகையில் கிழவர் வேஷத்தில் வைஷ்ணவியின் குடிசைப் பக்கம் வந்தார்.

கிழவர் வேடத்தில் இருந்த ராமரை வைஷ்ணவியால் அடையாளம் காணமுடியவில்லை. அதனால் ராமர் அவரின் கல்கி அவதாரத்தில் தன் சக்தியாக ஏற்பதாக வாக்களித்தார். மேலும் திரிகூட மலைக்குகையில் மூன்று மஹாசக்திகள் இருப்பதாகவும், அங்கு தவம் மேற்கொள்ளச் சொன்னார். காஷ்மீர் வரை சென்று அன்னையை தரிசிக்க முடியாதவர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள வைஷ்ணவியை தரிசித்து பயனடையலாம். அன்னை கையில் ஜபமணி மாலை ஏந்தி தவக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

காளி தேவி: சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட‘காளி தேவி’ தனிப்பெரும் ஆற்றலுடையவள். தென்னக மக்களின் காவல் தெய்வம். சக்தி வழிபாட்டில் காளி வழிபாடு மிகத் தொன்மையானது. தன்னைப் படைத்த சிவபெருமானையே ஆடற் போட்டிக்கு அழைக்கும் அளவிற்கு நிகரற்ற ஆற்றல் பெற்றவள். சிவபெருமான் காளியோடு நடனமாடி அதில் அவளை வென்றார். அதன் பிறகு காளி தேவி சிவனை வழிபட்டதாக தேவாரம் முதலான திருமுறை நூல்கள் குறிப்பிடுகின்றன.

சிவனால் தோற்றுவிக்கப்பட்ட காளி சிவந்த பவழம்போல் உடல் பெற்றதால், ‘பவளக்காளி’ என்றும் அழைக்கப்பட்டாள். சிவனை போலவே பார்வதி தேவியும் தன் உடல் வண்ணத்திலிருந்து காளி தேவியை தோற்றுவித்ததால், ‘பச்சைக்காளி’ என்று அழைக்கப்படுகிறாள். மதுரையில் பச்சைக்காளி, பவளக்காளி வழிபாடு வெகு சிறப்பாக இன்றும் நடைபெறுகிறது. உலகில் பதினாறு செல்வங்களையும் ஒருவன் அடைந்தாலும் அவற்றை வைத்துக் காப்பாற்றி அனுபவிக்க உதவும் காவல் தெய்வமாக இருப்பவள் மகா காளி.

துர்கை: ஒரு காலத்தில் திதி என்பவளின் புதல்வி எருமை வடிவம் கொண்ட மகன் வேண்டித் தவம் புரிந்தாள். சுபாரிசு என்ற முனிவர் பிள்ளை பிறக்க அருள் புரிந்தார். மிகுந்த பலசாலியாக பிறந்த அந்த குழந்தைக்கு விக்ரமன் என்று பெயர் சூட்டினார். இவன் பிரம்மதேவனை நினைத்து தவமிருந்து அரிய வரங்களைப் பெற்று, தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் திருமாலிடம் தஞ்சம் அடைய, திருமால் சிவபெருமானை வேண்டினார். சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு பொறியை உண்டாக்கித் திருமால் மீது செலுத்தினார்.

அந்த பொறி பெண் வடிவம் பெற்றது. அவள் சிவனின் வலிமையையும், திருமாலின் அழகையும் ஒன்று சேர்த்து அழகிய பதுமையாக உருப்பெற்றாள். சிவபெருமானைப் போலவே சடாமுடி தரித்து அதில் சந்திரனை சூடியிருந்தாள். நெற்றியில் மூன்றாவது கண் விளங்க, எட்டுக் கரங்களைக் கொண்டு திருமாலை போலவே, சக்கரம், வில், வாள், கேடயம் என்ற ஆயுதங்களை தாங்கியிருந்தாள். தேவி விக்ரமன் மீது படையெடுத்து ஒன்பது நாட்கள் கடும் யுத்தம் செய்து, இறுதியில் தேவி மகிஷனின் தலையை வெட்டி வீழ்த்தினாள். அதனையே பீடமாக்கிக் கொண்டு அதன் மீது ஏறி நின்றாள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.

ஆனால் அசுரனைக் கொன்ற பாவம் அன்னையைச் சேர, பல தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்தாள். இறுதியில் திருவண்ணாமலையில் சிவ வழிபாடு செய்கையில் பெருமான் தோன்றி, சிவ பக்தர்களுக்கு காவலாக இருக்கும் வரத்தை தந்து தேவியின் பாவம் நீங்கச் செய்தார். அன்று முதல் துர்கா தேவி சிவ ஆலயங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.

தொகுப்பு: மகி

You may also like

Leave a Comment

8 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi