ஊட்டி மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் இருந்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். பிரசார வாகனத்தின் முன்புறம் பாஜ கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொடி பொருத்தப்பட்டிருந்தன. இந்த கொடிகளின் நடுவே 4வதாக பாஜ கூட்டணியில் இல்லாத அதிமுகவின் கொடியும் இருந்தது. வேட்பாளர் எல்.முருகன் பிரசார வாகனத்தில் ஏறி பேச முற்பட்டபோது பிரசார வாகனத்தின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த கூட்டணி கட்சிகளின் கொடிகளை கவனித்தார்.
அதிமுக கொடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வாகனத்தில் இருந்தபடி கீழே நின்றிருந்த நிர்வாகிகளை அழைத்து உடனடியாக அதிமுக கொடியை அகற்றுமாறு கூறினார். இதைத்தொடர்ந்து கட்சியினர் உடனடியாக வாகனத்தில் இருந்த கொடியை அப்புறப்படுத்தினர். இதன் பிறகே எல்.முருகன் பேச்சை துவக்கினார். இந்த படத்தை பகிர்ந்த நெட்டிசன்கள், பழை பாசம் இன்னும் போகல போல… என்று கிண்டலடித்து வருகின்றனர்.