Sunday, October 6, 2024
Home » 2024-25-ம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

2024-25-ம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

by MuthuKumar

சென்னை: 2024-2025 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழுமுயற்சியோடு பணியாற்றிட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியடபட்டுள்ள அறிக்கையில்;
“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்”என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் கல்வி வளர்ச்சியில் நம் தமிழ்நாடு முன்னிலை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு. தொடங்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம்.

கல்வியில் ஒரு மாநிலம் உயர்ந்த நிலையைப் பெறுகின்ற பொழுது, பல்வேறு துறைகளில் இயல்பாகவே உயர்வு பெறும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தியுள்ளார்கள். எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை செலவாகக் கருதாமல் கல்விக்கான முதலீடாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்கள். இதனை பள்ளிக்கல்வித் துறையில் உள்ள அலுவலர்கள். இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மாணவர் நலமே மாநில வளம் என்னும் உயரிய எண்ணத்தோடு செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறைக்கு 2021-22 -ஆம் நிதியாண்டிற்கு ரூபாய்.32,599.54 கோடியும்: 2022-23-ம் நிதியாண்டிற்கு ரூ. 36,895.89 கோடியும்; 2023-24-ஆம் நிதியாண்டிற்கு ரூ.40,299.32 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். நடப்பு ஆண்டில் ரூபாய். 44,042 கோடி ஒதுக்கியுள்ளார்கள். ஆக மொத்தம் ரூபாய். 1,53,796 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வத் தரம் உயரும் வகையில் மிக பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது. இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தேக்க நிலை முற்றிலும் குறைந்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களில், பலர் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.

கலைத்திருவிழாவின் மூலம், மாணவர்களிடத்தில் பொதிந்துள்ள பல்வகை ஆற்றலை வெளிக்கொணர்கின்ற சூழல் உருவாகியுள்ளது. “நம்பள்ளி நம்பெருமை” திட்டத்தினால் அரசுப் பள்ளிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” இந்திய ஒன்றியத்திலேயே, முதன்முதலாக நம் தமிழ்நாட்டில் தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகை கூடியுள்ளதோடு கற்கும் ஆர்வமும் கூடியுள்ளதை இதனால் பள்ளிக்கு நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதன் மூலம் “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்ற மகாகவியின் கனவு நிறைவேறியிருக்கிறது. “மணற்கேணித் திட்டம்” நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்திற்கு வழிவகுத்து கற்றனைத்தூறும் அறிவைச் சுரந்து கொண்டிருக்கிறது.

மாணவர்களின் மனதிற்கு மகிழ்வூட்டும் கல்விச் சுற்றுலா, ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள், தமிழ்மொழியின் ஆற்றலை பெருமையை மாணவர்கள் விரும்பி அறிந்திட தமிழ்க்கூடல், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி, வாசிப்பு இயக்கம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.

“விழுதுகள்” திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மேனாள் மாணவர்களை அழைத்து வந்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பட அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென ரூபாய். 7,500 கோடி மதிப்பீட்டில் “பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று இதுவரை, 2487 கோடி மதிப்பிலான 3601 வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிதியாண்டில் மேலும் ரூபாய். 1,000 கோடி பள்ளிக் கட்டமைப்பிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கபட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல் – கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech labs) மற்றும் 22.931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

18 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi