புது டெல்லி: அமெரிக்காவிற்கு பணி காரணமாகவும் சுற்றுலா செல்வதற்காகவும் வெளிநாட்டில் இருந்து அதிகமான பயணிகள் சென்று வருகின்றனர். டிக்கெட் விலை அதிகம், மற்றும் விசாவுக்காக நீண்ட நாட்கள் காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
இந்நிலையில் எந்த நாட்டில் இருந்து அதிக பயணிகள் அமெரிக்கா வந்துள்ளனர் என்பது தொடர்பாக அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய பயணம் மற்றும் சுற்றுலா அலுவலகம் கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 9.7 லட்சம் பயணிகளுடன் இங்கிலாந்து முதல் இடத்திலும், 5 லட்சம் பயணிகளுடன் இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. அதை தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.