Friday, September 20, 2024
Home » கல்வி ஞானம் அருளும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

கல்வி ஞானம் அருளும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

by Kalaivani Saravanan

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம். யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் ஜம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம்.

51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

காவிரி நீரில் சிவன்

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது.

ஜம்புகேஸ்வரர்

பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு ஜம்பு என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் இலிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.

மாறு வேடத்தில் சிவ பார்வதி

பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு ஸ்திரீ தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாகக் கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம்,நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள் என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

யார் பெரியவர்?

கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.

முக்தி கொடுத்த இறைவன்

இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார். சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

நவதுவாரங்கள்

ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர்.

அகிலாண்டேஸ்வரி

ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

புடவை கட்டி வரும் அர்ச்சகர்

உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம். அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

You may also like

Leave a Comment

2 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi