திண்டிவனம், ஏப். 12: ‘அரசு பள்ளிகளுக்கு தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணியமர்த்தல் ஆணை வழங்க வேண்டும்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கு 1325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கு, செப்.23ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் கடந்த 2019ம் ஆண்டும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020ம் ஆண்டும் நிரப்பப்பட்டன. ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி ஆணை வழங்காமல் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை.
தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து விட்டது. இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. அதனால், தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாசிரியர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட எந்த தடையும் இல்லை. எனவே, தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.