9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

திருச்சி: கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பிரதமர் மோடியின் முயற்சியால் தொடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய அரசு நாடு முழுவதும் ‘ரோஜ்கர் மேளா’ என்ற மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் 7வது பணி நியமன ஆணை வழங்கும் விழா திருச்சியில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுகளில் அடைய வேண்டிய சிறந்த வளர்ச்சிக்கான முயற்சிகளை பாஜ அரசு மேற்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்க, ‘இந்தியா ஸ்டார்ட் அப்’, ‘இந்தியா ஸ்கில்’ என பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பிரதமர் மோடியின் முயற்சியால் தொடக்கப்பட்டுள்ளன. உலக பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தை இந்தியா எட்டியுள்ளது. பிரதமர் சிறந்த உள்கட்டமைப்பை அமைத்து சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். தேவையான சட்டங்களை வைத்துக் கொண்டு, தேவையற்ற சட்டங்களை நீக்கும் பணியையும் செய்து வருகிறார். சேவை, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை தாரக மந்திரமாக பிரதமர் மோடி கொண்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

* 6 மாதத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை
பின்னர் அமைச்சர் எல். முருகன் அளித்த பேட்டியில், ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு பணியிடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதியளித்தார். அதன்படி 6 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கும் விரைவில் பணியாணை வழங்கப்படும். இதில் 95 சதவீதம் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்\” என்றார்.

Related posts

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை