மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்

ராய்ப்பூர்: மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி சட்டீஸ்கரில் நடந்த 2 சம்பவத்தில் 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம், போலாதபார் மாவட்டத்தை சேர்ந்த சைத்ரம் கைவர்த்தியா (47), அவருடைய சகோதரிகள் ஜமுனா (28), யசோதா (30), ஜமுனாவின் மகன் யாஷ் (11) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த 12ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராம்நாத் பட்லா என்பவரின் மகள் சமீப காலமாக கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். தனது மகளின் நிலைமைக்கு சைத்ரம் கைவர்த்தியாவின் தாய் வைத்த சூனியம்தான் காரணம் என்று கூறி ராம்நாத் பட்லாவும், அவரது இரண்டு மகன்களும் சேர்ந்து, 4 பேரை கொடூரமான முறையில் கொன்றது தெரியவந்தது.

அதையடுத்து கொலையாளிகள் ராம்நாத் பட்லா மற்றும் அவரது இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஓய்வதற்குள் அடுத்த சில தினங்களில் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் கிராமத்தில், இரண்டு தம்பதி மற்றும் ஒரு பெண் ஆகியோர் சேர்ந்து மாந்தீரிகம் மற்றும் சூனியம் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இந்த நபர்களை விட்டுவைத்தால் கிராமத்துக்கும், கிராம மக்களும் ஆபத்து ஏற்படும் என்று கருதியுள்ளனர்.

இதையடுத்து இரு தம்பதிகள் மற்றும் பெண்ணை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி கொன்றனர். இவர்கள் 5 பேருமே 32 முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 21 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட இரு சம்பவங்களில் 11 வயது சிறுவன் உள்பட 4 பேர் மற்றும் பெண் உட்பட இரண்டு தம்பதிகள் என 5 பேருடன் சேர்த்து 9 பேர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை