90 சதவீதம் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம் வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிப்பு இல்லை வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஜன.10: வேலூர் மாவட்டத்தில் நேற்று 90 சதவீதம் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர். தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும், 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இப்போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இருப்பினும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தொமுச, ஐஎன்டியுசி போன்ற தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அனைத்து பஸ்களையும் பொதுமக்களுக்கு இடையூறின்றி வழக்கம்போல் இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்து பணிமனைகளிலும் பராமரிப்பு, பஸ்களை இயக்குவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை வேலூர் மாவட்டத்தில் நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது. ஒருசில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் இயக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வேலூர் கொணவட்டம், கிருஷ்ணாநகர், ரங்காபுரம் போன்ற பணிமனைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலை நிறுத்த போராட்டம் பிசுபிசுத்தது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூர் மண்டலத்தில் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்) ரங்காபுரம், கொணவட்டம், கிருஷ்ணா நகர், ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், பேரணாம்பட்டு ஆகிய 10 இடங்களில் அரசு போக்குவரத்து பணிமனைகள் மூலம் மொத்தம் 618 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளும் அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 299 அரசு பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் 270 பஸ்கள் இயக்கப்பட்டது. அதாவது 90 சதவீதம் ஆகும். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பஸ்களையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக 100 சதவீத பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

இடியுடன் கொட்டிய கனமழை

பாலித்தீன் குப்பைகளால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை