9 முதல் பிளஸ் 2 வரை முழு நேரம் இயக்கம் புதுச்சேரியில் 6 மாதங்களுக்குபின் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு-தோரணங்கள் கட்டி வரவேற்பு

புதுச்சேரி :  புதுவையில் 6 மாதங்களுக்கு பிறகு அரசின் நெறிமுறைகளை பின்பற்றி  தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப்பின் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை வாழை, பலூன்  தோரணங்கள் கட்டி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத்தில் பல மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் நேற்று துவங்கின. இன்று  2, 4, 6, 8 ஆகிய வகுப்புகள்  துவங்கவுள்ளன. கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி சானிடைசர் கொண்டு மாணவர்கள்  கைகள் சுத்தம் செய்த பின்னர் வகுப்புகளுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளில் மாணவ- மாணவிகள் அமர வைக்கப்பட்டனர்.   இந்த கல்வியாண்டில் 6 மாதங்களுக்கு பின் நேற்று வகுப்புகள் துவங்கியது. ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை நடத்தினர். லப்போர்த் வீதி எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவிகளை வாழை தோரணம், பலூன்கள் கட்டி ஆசிரியர்கள் வரவேற்று கொரோனா தடுப்புவழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின்  உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி உறுதிமொழி எடுத்து வகுப்பறைக்குள் சென்றனர்.நீடராஜப்பர்  வீதியிலுள்ள சவரிராயலு நாயகர் அரசு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு  ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஒரு பெஞ்சில் 2 மாணவர்கள் மட்டுமே  அமர வைக்கப்பட்டனர். தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்த  மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி திறந்த முதல் நாளிலேயே புத்தகபை மற்றும் பாடபுத்தகங்கள்  விநியோகிக்கப்பட்டன. மேலும் இதுவரை 9 முதல் பிளஸ் 2 வரை அரைநாள் வகுப்புகளே நடைபெற்றது.நேற்று முதல் பிளஸ்1, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழுநேரம் பள்ளிகள் இயங்கின. இதையடுத்து அரசு, நிதியுதவி பள்ளிகளில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வகுப்புகளை கவனித்த மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு திரும்பியதால் பெற்றோர்கள்  மகிழ்ச்சியடைந்தனர். அதேவேளையில் பள்ளிகள் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக  இருக்க தேவையான ஆலோசனைகளை வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர்….

Related posts

65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு