9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 97,831 பேர் வேட்புமனு தாக்கல்: வேட்பாளர் இறுதி பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: 9 தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி நிலவரப்படி மொத்தம் 64,299 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். கடந்த 22ம் தேதி மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. கடைசி நாளில் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.  இதை தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. மொத்தம் உள்ள 27 ஆயிரத்து 792 பதவிகளுக்காக பெறப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியிட தகுதியானவர்களா, சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 97,831 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். அதன்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள். நாளை மாலையே வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போதே வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீட்டு பணிகளும் நடைபெற உள்ளது. இதையடுத்து, வரும் 26ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில், 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடு குறித்து கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்துள்ளது. தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல், வாக்குச்சீட்டு அச்சடித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்தவுடன், பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினமே முடிவுகளும் வெளியாக உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடவடிக்கைகள் 16ம் தேதி முடிவுபெறும். பின்னர், 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. தற்செயல் தேர்தலுக்கு 2547 பேர் வேட்புமனுதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றி வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தற்செயல் தேர்தல்கள்(ஏற்கனவே தேர்தல் நடந்து இறப்பு, ராஜினாமால் காலியாக இருப்பது) நடைபெறும் 28 மாவட்டங்களில் ேவட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1466 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 519 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 376, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 186 பேர் என மொத்தம் 2547 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம்

தனிப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்படவில்லை: மாநகராட்சி விளக்கம்

போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்த இளம்பெண் : ஸ்பா சென்டரில் பரபரப்பு