9 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சுவாமி சிலையை கடலில் தேடிய கிராமமக்கள்-ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

ராமேஸ்வரம் :  திருப்பத்தூர் அருகிலுள்ள கருமிச்சான்பட்டி கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எற்பட்டு வருவதால் இதனை தவிர்க்க பல ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட முருகன் சிலையை நேற்று அக்னி தீர்த்த கடலில் தேடிய கருமிச்சான்பட்டி கிராமத்தினர் சிலை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கருமிச்சான்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் முருகன் சிலையின் முகம் சேதமடைந்ததால், சிலையை ராமேஸ்வரம் கொண்டு வந்து அக்னிதீர்த்த கடலில் போட்டுள்ளனர். இச்சம்பவம் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்த இக்கிராமத்தினர் கடலில் போட்ட முருகன் சிலையை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தேடிப்பார்த்தனர். முருகன் சிலையை அக்னிதீர்த்த கடலில் போட்டு சென்ற நாள் முதல் கருமிச்சான்பட்டி கிராமத்தில் பல்வேறு துயர சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இளைஞர் முதல் முதியவர்கள் வரை பத்துக்கும் மேற்பட்டோர் மர்மமாக திடீர் திடீரென உயிரிழந்துள்ளனர். கிராமத்தில் விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் எதுவும் மேம்படாமல் மக்கள் வருவாயின்றி பல்வேறு சிரமத்துக்குள்ளாகி கஷ்டங்களையும் பிரச்னைகளையும் சந்தித்து வந்துள்ளனர். இதனால் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ள வைப்பதற்காக கிராம பூசாரியிடம் குறிகேட்டுள்ளனர். சாமியாடி குறி சொல்லிய பூசாரி கடலில் போட்ட முருகன் சிலையை மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று குறிசொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் என 50க்கும் மேற்பட்ட கருமிச்சான்பட்டி கிராமத்தினர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். அக்னிதீர்த்த கடலில் இறங்கி பக்தர்கள் தீர்த்தமாடும் பகுதி மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதியிலும் தேடி பார்த்தனர். குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் தேடியதில் கடலுக்குள் போடப்பட்ட சேதமடைந்த சிவன், விநாயகர் உட்பட பல்வேறு கற்சிலைகள் இவர்களது கையில் சிக்கியது. ஆனால் இவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கடலில் போடப்பட்ட சேதமடைந்த முருகன் கற்சிலை மட்டும் கிடைக்கவில்லை. முருகன் சிலையை தேடி கண்டுபிடித்து விடலாம். கிராமத்திற்கு விடிவு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் கடலில் இறங்கிய இவர்கள் சிலை கிடைக்காத சோகத்தில் ஏமாற்றத்துடன் கருமிச்சான்பட்டி கிராமத்திற்கு திரும்பிச் சென்றனர்….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு