விக்கிரவாண்டியில் 82.48 சதவீத வாக்குப்பதிவு; நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை; வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குகள் நாளை மறுநாள் 13ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. 82.48 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி மற்றும் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்டிராங் ரூமில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (13ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் வெற்றி நிலவரம் தெரிந்து விடும். இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி வாக்குகளை எண்ணும் அதிகாரிகளுக்கு இன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பயிற்சி நடக்கிறது.

 

Related posts

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 6ம் தேதி வரை மழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் இருந்து வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு: அமைச்சர் தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களின் 5 மேலாண் இயக்குநர்கள் பணியிட மாற்றம்