பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி 8 மாணவர்கள் காயம்

*போக்குவரத்து போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே நேற்று காலை பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதியதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் தனியார் பள்ளி மாணவர்கள் 8 பேரை ஆட்டோவில் அழைத்து கொண்டு அண்ணா சாலையிலிருந்து பழைய உழவர்சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லியனூர் பகுதியை சேர்ந்த சுகன் என்பவர் காரில் மறைமலை அடிகள் சாலையிலிருந்து புஸ்சி வீதி நோக்கி வந்தார்.

அப்போது அண்ணா சதுக்கம் அருகே ஆட்டோவும், காரும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ரகுமான் மற்றும் பள்ளி மாணவர்கள் 8 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக மாணவர்களை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு போக்குவரத்து போலீசார் கார், ஆட்டோவை மீட்டு காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இவ்விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுவை புஸ்சி வீதியில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் பள்ளி குழந்தைகள் 8 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பெற்றோர்கள் விதிகளை பின்பற்றாமல் ஒரு ஆட்டோவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் போக்குவரத்து போலீசார் விதிகள் மீறி செயல்படும் ஆட்டோக்களை பிடித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே மீண்டும் இதுபோன்று பெரிய சம்பவம் நடைபெறாமல் இருக்க போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லையில் அரசுத்துறை அலுவலர்கள் சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி

கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கு ஜாமீன்

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா கோலாகலம்