8 வயது சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் வேலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த

வேலூர், ஜூன் 26: ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்து கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தங்கள் 8 வயது மகளுடன் ஆந்திராவில் வசிக்கும் தங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி புனேவில் இருந்து காட்பாடி வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அதே ரயிலில் காட்பாடியில் இருந்து காட்பாடி காந்தி நகரை சேர்ந்த சுரேஷ்பாபு(65) என்பவரும் பயணம் செய்தார். ரயில் ஜோலார்பேட்டை தாண்டி சென்று கொண்டிருந்த போது சிறுமியிடம் சுரேஷ்பாபுவின் அத்துமீறல் அதிகரிக்கவே சிறுமி கூச்சலிட்டாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து ரயில் சேலம் ரயில் நிலையத்தில் வந்து நின்ற போது அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார், சிறுமியிடம் அத்துமீறிய சுரேஷ்பாபுவை பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் சுரேஷ்பாபுவை வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடந்தது. முடிவில் சிறுமியிடம் அத்துமீறிய சுரேஷ்பாபுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தியா ஆஜரானார்.

Related posts

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 166 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை: ₹10.52 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பு

ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத தரமற்ற மின் சாதனங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

₹8.36 கோடியில் ரயில் நிலைய விரிவாக்க பணி