8 டன் ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில் பதுக்கல்: பெண் விற்பனையாளர் கணவருடன் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ரேஷன் கடை மற்றும் விடுதி மாணவர்களுக்கு வழங்கிய 8 டன் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்த ரேஷன்கடை விற்பனையாளர், அவரது கணவரான விடுதி காப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜம்னாமரத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. மலை கிராமங்களை ேசர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசு விடுதியில் தங்கி தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகின்றனர். அருணகிரி என்பவர் விடுதி காப்பாளராக உள்ளார். இவரது மனைவி சாந்தி. இவர் பாலாவாடி, தோப்பூர், கல்யாணமண்டை ஆகிய 3 கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளராக உள்ளார். இந்நிலையில் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அருணகிரியும், அவரது மனைவி சாந்தி, ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களையும் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தன. நேற்றிரவு அருணகிரி வீட்டில் இருந்து அரிசி, பருப்பு மூட்டைகளை சிலர் வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போளூர் வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் பறக்கும் படையினர் ஜம்னாமரத்தூருக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள அருணகிரி வீட்டில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த வேனை மடக்கி பிடித்தனர். மேலும் அருணகிரியின் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் மூட்டை மூட்டையாக அரிசி, பருப்பு, கொண்ைடக்கடலை, பட்டாணி, பாமாயில் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் 8டன் மதிப்புள்ள 160மூட்டை ரேஷன் அரிசி, 10 மூட்டை பருப்பு, 3 மூட்டை கொண்டைகடலை, 5மூட்டை பட்டாணி, 100 லிட்டர் பாமாயில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து தனி தாசில்தார் ஜெகதீசன், ஜம்னாமரத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணகிரி, அவரது மனைவி சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மலைவாழ் மக்கள் மற்றும் விடுதி மாணவர்களுக்கு வழங்கும் பொருட்கள் பதுக்கி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது