8 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்ப்பு: காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட் பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை

வேலூர், ஜூன் 19: 8 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரம் உட்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளதாக கடந்த ஆண்டு நடந்த தணிக்கையின்போது தெரிய வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும், 73 சென்ட் புறம்போக்கு நிலத்தையும் பலருக்கும் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளையும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும் தணிக்கையின்போது தெரிய வந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய பத்திரப்பதிவு டிஐஜி சுதாமல்லி, இந்த முறைகேட்டுக்கு காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவக்குமார் காரணம் என்பதை கண்டறிந்தார். அதோடு ஏற்கனவே இவர் பல முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கைக்கு ஆளானவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 நாட்கள் பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்தபோதும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கையை பத்திரப்பதிவு ஐஜி ஆலிவர் பொன்ராஜூக்கு டிஐஜி சுதாமல்லி அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் டிஸ்மிஸ் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு