7,9 வயது சிறுமிகள் கூட்டு பலாத்காரம் 15 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை: விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு 9, 7வயது (சம்பவத்தின்போது) மகள்கள் உண்டு. அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மகள்களை தாத்தா, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு 2வது கணவருடன் சென்றுள்ளார். சிறுமிகள் இருவரும் புதுச்சேரி மாநில அரசு பள்ளியில் சேர்ந்து படித்துள்ளனர்.

கடந்த 2019 ஜூலை 18ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமிகள் மயக்கமடைந்து சோர்வுடன் காணப்பட்டதால், அவர்களை ஆசிரியர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் 2 சிறுமிகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு அறிக்கை அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 15 பேர் சேர்ந்து பல மாதங்களாக அக்கா, தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் தீனதயாளன்(24), அஜித்குமார்(22), பிரபாகரன்(23), பிரசாந்த்(20),ரவிக்குமார்(23), அருண்(எ) தமிழரசன்(24), மகேஷ்(37), ரமேஷ்(30), துரை(47), மோகன்(23), செல்வம்(37), கமலக்கண்ணன்(30), முருகன்(40), துரைசாமி(55), செல்சேகர் (55) ஆகிய 15 பேரையும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோதா விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கும் இரண்டு பிரிவுகளில் 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதையடுத்து 15 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

Related posts

பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்!

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு: இந்தியா’ கூட்டணி போராட்டம்: பேருந்துகள் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்

சென்னை காசிமேட்டில் கஞ்சா டெலிவரி: 2 பேர் கைது