இதுவரை இல்லாத வகையில் 2022ம் ஆண்டில் உலகளவில் 75 லட்சம் பேருக்கு காசநோய்: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு 2022ம் ஆண்டில் 75 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.உலகளவில் கொரோனாவுக்குப் பிறகு அதிக உயிர்களை பலி வாங்கும் நோயாக காசநோய் இருந்து வருகிறது. காசநோய் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான காசநோய் அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை இல்லாத அளவுக்கு உலகளவில் 2022ம் ஆண்டில் புதிதாக 75 லட்சம் பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

2021ல் 64 லட்சம் பேரும், 2020ல் 58 லட்சம் பேரும், 2019ல் 71 லட்சம் பேரும் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 2020 மற்றும் 2021ல் இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 60 சதவீத காசநோய் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக இருந்தன. தற்போது அந்நாடுகளில் மீண்டும் 2019 நிலை திரும்பிவிட்டதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 2022ல் காசநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சமாக உள்ளது. இதில், 27 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

2021ல் இந்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சமாக இருந்தது. மொத்த காசநோயாளில் 46 சதவீதம் பேர் தென் கிழக்கு ஆசியாவிலும், 23 சதவீதம் பேர் ஆப்ரிக்காவிலும், 18 சதவீதம் பேர் மேற்கு பசிபிக் பிராந்தியத்திலும், 8.1 சதவீதம் பேர் மத்திய தரைக்கடல் பகுதியிலும், 3.1 சதவீதம் அமெரிக்காவிலும், 2.2 சதவீதம் ஐரோப்பாவிலும் வசிப்பவர்கள் ஆவர்.காசநோயால் (எச்ஐவி பாதித்தவர்கள் உட்பட) 2022ல் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர். 2021ல் 14 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. காசநோயாகளில் 5ல் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டுள்ள இந்த அறிக்கையில், புதிய காசநோய் கண்டறிதல், மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!