700 ஆண்டுகள் தொன்மையான ₹2 கோடி மதிப்பு தாராதேவி,விநாயகர் சிலைகள் மீட்பு: விற்பனை செய்ய முயன்ற நபர் கைது

சென்னை: 700 ஆண்டுகள் தொன்மையான தாராதேவி மற்றும் விநாயகர் சிலைகளை ₹2 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற நபரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் அருகே உள்ள டி.மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 சாமி சிலைகளை விற்பனை செய்ய ஒருவர் முயற்சி செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை மற்றும் காவலர்கள் மதிக்குமார், கோபால், குமாரராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், சிலையை விற்பனை செய்ய முயன்ற நபரிடம் சிலைகளை வாங்குவது போல் பேரம் பேசியுள்ளனர். அப்போது 2 சிலைகளும் ₹2 கோடிக்கு விற்பனை செய்வதாக இருவரும் கூறினர். அதற்கு தனிப்படையினர் ஒப்புக்கொண்டு சிலைகளை நேரில் பார்த்ததும் முழு பணம் ₹2 கோடி கொடுத்து சிலைகளை வாங்கிக்கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். அதன்படி 2 சிலைகளை கொண்டு வந்து காட்டிய போது, தனிப்படையினர் அதிரடியாக சிலையை விற்பனை செய்ய முயன்ற நபரை கையும் களவுமான பிடித்தனர்.பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். அதில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள டி.மணல்மேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (32) என தெரியவந்தது. இவரிடம் இருந்து புத்தமத பெண் கடவுளின் உலோக சிலை, அமர்ந்த நிலையில் உள்ள உலோகத்தினால் ஆன விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்த போது, புத்தமத கடவுளான அபலோகிதேஸ்வராவின் மனைவி தாரா தேவியின் சிலை என்றும், காக்கும் கடவுளாக அறியப்படும் தாரா தேவியின் வழிபாடானது திபெத் நாட்டில் தோன்றியது என்பதும் தெரியவந்தது. இந்த சிலை 700 ஆண்டுகள் தொன்மையானது என்றும் கண்டறியப்பட்டது. மற்றொரு சிலையான விநாயகர் சிலை ஏறத்தாழ 300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், இரண்டு சிலைகளும் மிகவும் அரிதான சிலைகள் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர். அதைதொடர்ந்து இந்த 2 சிலைகளும் கைது செய்யப்பட்ட சுரேஷிடம் யார் மூலமாக வந்தது, சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை