7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மீன் சமையல்

நாடோடியாக வாழ்ந்த ஆதி மனிதன் முதலில் தாவர உணவுகளைத்தான் உண்டிருக்கிறான். பின்பு விலங்குகளை சாப்பிடப் பழகி, வேட்டையாட ஆரம்பித்திருக்கிறான். ஆனால் அவற்றை பச்சையாகவே உண்டிருக்கிறான். ஒருநாள் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், காட்டில் வசித்த விலங்குகள் தப்பி ஓட வழியின்றி கூட்டம் கூட்டமாக மாண்டிருக்கின்றன. தீ அணைந்த பிறகு காட்டுக்குள் உலவிய மனிதன், தீயில் வெந்த விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டு பார்த்திருக்கிறான். பச்சை இறைச்சியை விட கூடுதல் ருசியை அவன் நாவு காண்கிறது. அதுதான் வேக வைத்த உணவு ருசியின் மகத்துவத்தை அவன் உணர்ந்த தருணம். சிக்கிமுக்கிக் கற்களை உரசி தீயை உருவாக்கி, குளிர்காய்ந்த மனிதன் அதன்பிறகுதான் உணவுகளை சமைக்க ஆரம்பித்திருக்கிறான்.

ஆனாலும் அவனுக்கு சமையல் முறைகள் தெரியாது. தீயை உண்டாக்கி, சினிமாவில் காண்பிப்பது போல நெருப்பில் வாட்டித்தான் உணவுகளை வேக வைத்து சாப்பிட்டிருப்பான் என்றுதான் நாம் பல காலமாக கற்பனை செய்துவருகிறோம். ஆனால் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உணவுகளை சமைத்தே சாப்பிட்டிருக்கிறான் என்று அடித்துக்கூறுகிறது ஆராய்ச்சி ஒன்று. இஸ்ரேல் நாட்டில் உள்ள கலிலேயே கடலுக்கு வடக்குப்புறத்தில், ஜோர்டான் நதியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் நமது கீழடி போல ஓரிடத்தில் அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறார்கள். அந்த இடத்திற்கு பெயர் கெஷர் பெனட் யாகோப் தொல்பொருள் ஆராய்ச்சித்தளம். அந்த தளத்தில் சுமார் 6.5 அடி நீளமுள்ள ராட்சத மீன் இனங்களின் எச்சங்கள் கிடைத்துள்ளன.

சுமார் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அந்த மீன் எச்சங்களை எடுத்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, சமையல் வரலாற்றில் ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அந்த மீன்கள் உயிருடன் புதைந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் மனிதன் சமைத்து சாப்பிட்டுப் பார்த்தவை. அந்த மீன்களின் ஈறுகளில் உள்ள படிகக்கற்கள் நேரடியாக நெருப்பில் சுடப்படாமல், பக்குவமாக ஒரு சீரான வெப்ப நிலையில் சமைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஆராய்ச்சியாளர்களுக்கு உணர்த்தியிருக்கின்றன. இதன்மூலம் பழங்கால மனிதன், அதாவது 7 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் முறையாக சமைத்து சாப்பிடும் கலையை அறிந்தே வைத்திருக்கிறான் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். மீன்கள் மட்டுமல்ல. மற்ற விலங்குகளின் இறைச்சி மற்றும் தாவர உணவுகளை பழங்கால மனிதன் சமைத்தே உண்டிருக்கிறான் என்பது இந்த ஆராய்ச்சி மூலம் உறுதியாகி இருக்கிறது.

கெஷர் பெனட் யாகோப் ஆராய்ச்சித் தளத்தில் ஹூலா ஏரி என்ற ஒரு நன்னீர் ஏரி இருந்திருக்கிறது. இந்த ஏரியில்தான் 6.5 அடி நீளம் வளரக்கூடிய ராட்சத மீன்கள் இருந்திருக்கின்றன. கெண்டை மீன்கள் போல தோற்றம் கொண்ட இந்த மீன்கள்தான் அப்போதைய மனிதனுக்கு மிக பிடித்தமான மீனினமாக இருந்திருக்கிறது. ஏரியின் கரையில் இருந்த மரங்கள், தாவரங்களில் இருந்து கிடைத்த சைவ உணவும் அந்த மனிதன் அங்கேயே தங்கி பிழைப்பு நடத்த ஏதுவாகி இருக்கிறது. பின்னாட்களில் இந்த மீனினங்கள் ஹூலா ஏரியில் அறுகிவிட்டன. இதனால் அங்கிருந்த மனிதன் இடம்பெயர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மனித சமூகம் சமைக்க ஆரம்பித்தது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருக்கும் என நம்பப்பட்டு வந்த நிலையில், இந்த ஆராய்ச்சி மனித சமூகம் சுமார் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சமைப்பதால் உண்டாகும் பயன் குறித்து தெரிந்து செயல்படுத்தி இருக்கிறது என்பதை அறுதியிட்டு கூறுகிறது. மேலும் அன்றைய மனிதன் மீன் உணவின் மகத்துவத்தையும் உணர்ந்து வைத்திருந்தான் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. “மனித சமூகம் பச்சையாக காய்கறிகள், இறைச்சி உள்ளிட்டவற்றை உண்டு வந்த நிலையில், சமைத்து சாப்பிட ஆரம்பித்த சமயம் பரிணாம வளர்ச்சியில் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஏரியில் இருந்த மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்ட அந்த காலகட்டம் உணவு வரலாற்றிலும் ஒரு முக்கிய மைல்கல்’’ என்கின்றனர், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்.

– அ.உ.வீரமணி

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி