7 நாட்கள் தனிமை இல்லை 2 டோஸ் தடுப்பூசி போதும்: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு தளர்வு

புதுடெல்லி:  வருகின்ற 14ம்  தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தளர்த்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்று புதிய பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. இந்தியாவிலும் புதிய பாதிப்புக்கள் கட்டுக்குள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:இந்தியாவின் ஒருங்கிணைப்பில் உள்ள 82 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இனிமேல், 7 நாட்கள் தனிமை கட்டாயமில்லை. 8வது நாள் கொரோனா பரிசோதனையும் எடுக்க தேவையில்லை. இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதம் பேரின் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்படும். அவர்கள் தங்களின் மாதிரிகளை தந்து விட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம். 7 நாள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு மாறாக பயணிகள், தங்கள் உடல் நலத்தை 14 நாட்கள் சுயமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்படும் ஆர்சி-பிசிஆர் பரிசோதனைக்கு மாறாக, பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கொரோனா ஆபத்து உள்ள நாடுகள் பட்டியல் நீக்கப்படுகிறது. இந்த புதிய தளர்வுகள் வருகின்ற 14ம் தேதி முதல் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.* நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் புதிதாக 67,084 பேர் பாதித்துள்ளனர். * இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது. * தொற்று பாதித்த 1,241 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 6 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. * குணமடைவோர் சதவீதம் 96.95 ஆக அதிகரித்துள்ளது. * கடந்த 24 மணி நேரத்தில் 1,02,039 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி