6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தீவிரமாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை, தமிழ்நாட்டிலும் தீவிரம் அடைந்துள்ளது. அதனால் வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக வேலூர், காட்பாடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

இதற்கிடையே, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் நேற்று நிலவியது. பிற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் நிலவியது. இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாகவும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 11ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதுதவிர இன்று, மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 7 மற்றும் 8ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதைஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள் மற்றும் வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை