69 வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி மோடி, ராகுல், தலைவர்கள் வாழ்த்து: பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை; நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 69வது பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 69வது பிறந்த நாள் ஆகும். இதை முன்னிட்டு நேற்று காலை 7.30 மணிக்கு ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார். தொடர்ந்து, கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பிறகு தான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வைத்து வணங்கினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கே.என்.நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சாமிநாதன், ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, காந்தி, ஆவடி நாசர், சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, எம்பி, எம்எல்ஏக்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வரவேற்றார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று, கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அங்கிருந்து ராசாத்தி அம்மாள் இல்லத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி எம்பி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சென்னை, அண்ணாநகரில் உள்ள மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் வீடு திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்’ என்று தமது விருப்பத்தை தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினும், ‘தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்’ என உறுதி அளித்தார். முன்னதாக, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டு, உங்களுக்கு நீண்ட பொதுவாழ்வு அமைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும்’’ என்று வாழ்த்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வாழ்த்துச் செய்தியுடன் மலர்கொத்து அனுப்பி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். இதேபோல், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, பாஜ மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோன்று வெளிமாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் தொலைபேசியிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நேற்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்பி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், அவரது மகன் ராமச்சந்திரன் எம்எல்ஏ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தவாக தலைவர் வேல்முருகன், நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.அதேநேரத்தில் திமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று புத்தகம், பொன்னாடை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து தொண்டர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசுகளை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மதியம் 1.30 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்தை அவர் ஏற்றுக்கொண்டார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் என்பதால், தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். தமிழகம் முழுவதும், முக்கிய சந்திப்புகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு திமுக கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கியதுடன், ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். திமுக கொள்கை விளக்க பாடல்களும் அப்போது ஒலிபரப்பப்பட்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் என்பதால், தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்