ஹமாசின் 600 நிலைகள் தாக்கி அழிப்பு காசாவில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்திய இஸ்ரேல் ராணுவம்: மருத்துவமனைகளை காலி செய்ய உத்தரவு

கான் யூனிஸ்: இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் 3 வாரத்தை தாண்டி நீடிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை காசாவில நுழைந்து தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், 2ம் கட்ட போரில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேல் உத்தரவால், வடக்கு காசாவிலிருந்து 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் தெற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இருப்பினும் தெற்கிலும் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதால் வடக்கு பகுதியிலும் இன்னமும் ஆயிரக்கணக்கானோர் தங்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. இஸ்ரேலிய துருப்புகளும், அதன் பீரங்கிகளும் வடக்கு காசாவின் குடியிருப்பு பகுதிகளை சென்றடைந்துள்ளன. அங்கு குடியிருப்புகளில் புகுந்து ஹமாஸ் படையினரை தேடி வருகின்றனர். வடக்கு காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான சண்டை தீவிரமடைந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய 600 இலக்குகள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதில் ஹமாசின் பதுங்கு குழிகள், ஆயுத கிடங்குகள், ஏவுகணை ஏவும் நிலைகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், காசா சிட்டியில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வரும் ஷிபா மற்றும் அல் குத்ஸ் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அல் குத்ஸ் மருத்துவமனையில் 14,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனைகளை உடனடியாக காலி செய்ய இஸ்ரேல் ராணுவம் நேற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், நோயாளிகள் பலர் உயிரிழப்பார்கள் என்பதால் மருத்துவ பணியாளர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். காசாவில் நேற்று வரை இப்போரில் பலியான மக்களின் எண்ணிக்கை 8,300 ஆக அதிகரித்துள்ளது.

* இஸ்ரேல் எதிர்ப்பாளர்களால் ரஷ்யாவில் பெரும் பதற்றம்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து ரஷ்யாவின் டகேஸ்டன் பிராந்தியத்தின் மக்காசகலா விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் வந்தது. அப்போது திடீரென இஸ்ரேல் எதிர்பார்ப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தில் தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்தனர். விமானத்தில் இருந்து இறங்கியவர்களின் பாஸ்போர்ட்டை பார்த்து, இஸ்ரேலியர்கள், யூதர்கள் இருக்கிறார்களா என விசாரித்தனர். இந்த விவகாரம் ரஷ்யாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்