கேன்டர்பரி: இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில், 6 இன்னிங்சில் 15 ரன் மட்டுமே எடுத்த வீரர் 7வது இன்னிங்சில் 15 பவுண்டரி, 15 சிக்சருடன் 190 ரன் விளாசிய ருசிகரம் அரங்கேறி உள்ளது. கென்ட் – கிளமார்கன் அணிகள் மோதும் போட்டி, கேன்டர்பரி செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் கென்ட் அணி 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்திருந்தது. 2வது நாள் ஆட்டத்தில் கென்ட் 128 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறிய நிலையில், அந்த அணியின் டேரன் ஸ்டீவன்ஸ் – மிகுவல் கம்மின்ஸ் இணைந்து 9வது விக்கெட்டுக்கு போராடினர்.கம்மின்ஸ் ஒரு முனையில் பார்வையாளராக நிற்க, கிளமார்கன் பந்துவீச்சை அடித்து நொறுக்கி மிரள வைத்தார் ஸ்டீவன்ஸ். நடப்பு சீசனில் 6 இன்னிங்சில் வெறும் 15 ரன் மட்டுமே எடுத்திருந்த அவர், இந்த இன்னிங்சில் அதிரடியாக 190 ரன் விளாசி (149 பந்து, 15 பவுண்டரி, 15 சிக்சர்) அசத்தினார். ஸ்டீவன்ஸ் – கம்மின்ஸ் ஜோடி 9வது விக்கெட்டுக்கு சேர்த்த 166 ரன்னில், கம்மின்ஸ் பங்களிப்பு 1 ரன் மட்டுமே! 61 பந்துகளை எதிர்கொண்ட கம்மின்ஸ் 7 ரன் எடுத்தார். இருவரும் லாபுஷேன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கென்ட் அணி 76.2 ஓவரில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இப்படி ஒரு அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல் ரவுண்டர் ஸ்டீவன்ஸ் வயது 45 தான் என்பது கூடுதல் சுவாரசியம். 2019ல் இனி உங்கள் கான்ட்ராக்ட் புதுப்பிக்கப்படாது என்று கென்ட் நிர்வாகம் தெரிவித்துவிட்ட நிலையில், யார்க்ஷயர் அணிக்கு எதிராக அவர் 225 பந்தில் 237 ரன் விளாசியதுடன் 7 விக்கெட்டையும் வீழ்த்தி மிரட்ட… உடனடியாக ஒப்பந்த நீட்டிப்பு அறிவிப்பும் வெளியானது….
6 இன்னிங்சில் 15 ரன் எடுத்தவர் ஒரே இன்னிங்சில் 15 பவுண்டரி, 15 சிக்சர் விளாசி அசத்தல்!
previous post