வானத்தில் ஒரே நேர்கோட்டில் காணப்பட்ட 6 கோள்கள்

*தொலைநோக்கி வழியாக கண்டுகளித்த மக்கள்

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் நேற்று வானத்தில் வரிசையாக காணப்பட்ட 6 கோள்களை பொதுமக்கள் சிறப்பு தொலைநோக்கி வழியாக ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
கடந்த ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை அதிகாலையில் சனி, நெப்டியூன், செவ்வாய், யுரேனஸ், புதன் மற்றும் வியாழன் ஆகிய 6 கிரகங்களும் கிழக்கு வானில் மேலிருந்து அடிவானம் வரை ஒரே வரிசையில் காணப்பட்டன.

இந்த நிகழ்வை ஜூன் முதல் வாரம் முழுவதும் காண முடியும் என்பதால், புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் 6 கோள்களையும் பொதுமக்கள் தொலை நோக்கி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நேற்று அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தொலை நோக்கி மூலம் 6 கோள்களை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

இதுகுறித்து அறிவியல் இயக்க துணைத்தலைவரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஹேமாவதி கூறும்போது, ஒரே வரிசையில் வானில் 6 கோள்கள் காணப்பட்ட நிகழ்வை செல்போனில் உள்ள ஸ்கை வியூ லைட் என்ற செயலி மூலமாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 6 கோள்களின் இருப்பிடம் எந்த நட்சத்திர மண்டலத்தில் உள்ளது என விளக்கப்பட்டது.

இதுபோன்ற நிகழ்வு வருகிற ஆகஸ்ட் 28ம் தேதியும், அடுத்த ஆண்டு ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அறிவியல் இயக்க தலைவர் மதிவாணன், பொதுச்செயலாளர் முருகவேல்ராஜா, பொருளாளர் ரமேஷ், ஆலோசகர் சேகர், உறுப்பினர் விஜய் கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை