திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 நாட்களில் சொர்க்கவாசல் வழியாக 6.43 லட்சம் பக்தர்கள் தரிசனம்: 40.18 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருந்த 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ₹40.18 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் என அழைக்கும் சொர்க்கவாசல் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாசியன்று அதிகாலை திறப்பது வழக்கம். இதன் வழியாக எழுந்தருளும் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அதே நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அன்று ஒருநாள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு தரிசனம் செய்தால் வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவை தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவும் தங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவும் கருதுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்கழி மாத ஏகாதசியன்று அதிகாலை திறக்கப்படும் சொர்க்கவாசல் மறுநாள் துவாதசியன்று நள்ளிரவு அடைப்பது வழக்கம். ஆனால் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியதால் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக சொர்க்கவாசல் 10 நாட்கள் திறந்திருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது.

அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 10ம் நாளான நேற்று வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் ஆகம விதிமுறைப்படி சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் மூடப்பட்டது. கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரை 10 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 934 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 720 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 10 நாட்களில் நேற்று (நள்ளிரவு 12 மணி வரை) உண்டியலில் ₹40.18 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று முதல் ஏழுமலையானுக்கு வழக்கம்போல் நடைபெறக்கூடிய நித்திய பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சர்வ தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்