6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் 7 தொகுதிகளில் 4ல் பாஜ வெற்றி: 3 இடங்களை எதிர்க்கட்சிகள் பிடித்தன

புதுடெல்லி: தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ 4 இடங்களில் வெற்றி பெற்றது. டிஆர்எஸ், ஆர்ஜேடி, சிவசேனா கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றின. காங்கிரஸ் 2 தொகுதிகளை இழந்தது.தெலங்கானாவில் முனுகோடு, மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, பீகாரின் மொகாமா, கோபாலகஞ்ச், அரியானாவின் ஆதம்பூர், உத்தரப் பிரேதசத்தின் கோலா கோக்ரன்நாத், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், அரியானாவின் ஆதம்பூர், பீகாரின் கோபால்கஞ்ச், உபி.யின் கோலா கோக்ரன்நாத், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய 4 தொகுதிகளை பாஜ கைப்பற்றியது. அரியானா, ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் வசமிருந்த நிலையில் இடைத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ல் இங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற குல்தீப் பிஷ்னோய் சமீபத்தில் பாஜ.வுக்கு கட்சி மாறி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் குல்தீப்பின் மகள் பாவ்யா பிஷ்னோய் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார். அவர் 67,492 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷை விட 15,740 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேத்தி பாவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) இணைந்து ஆட்சி அமைத்த பிறகு நடந்த இடைத்தேர்தல் என்பதால் அங்கு 2 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டன. இதில், கோபால்கஞ்ச் தொகுதியை பாஜ நூலிழையில் தன்வசப்படுத்தியது. இங்கு பாஜ வேட்பாளர் குசும் தேவி 70,053 வாக்குகள் பெற்று வெறும் 1,789 வாக்கு வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளர் மோகன் பிரசாத் குப்தாவை வென்றார். இத்தொகுதியில் அசாசுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 12 ஆயிரம் வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 8 ஆயிரம் வாக்குகளை பெற்று வாக்குகளை பிரித்ததால், பாஜ வெற்றி பெற்றுள்ளது.பீகாரில் மற்றொரு தொகுதியான மொகாமாவில் ஆர்ஜேடி வேட்பாளர் நீலம் தேவி 16,000 வாக்கு வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் சோனம் தேவியை வென்றார். பீகார் துணை முதல்வரான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், ‘‘கோபால்கஞ்ச் தொகுதியில் நூலிழையில் வெற்றி கை நழுவியது. ஆனாலும், ஐஜத-ஆர்ஜேடி கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தந்துள்ளனர். எங்களின் சோதனை வெற்றி பெற்றுள்ளது,’’ என்றார். தெலங்கானாவில் முனுகோடு தொகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), பாஜ கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் டிஆர்எஸ் வேட்பாளர் கூசுகுண்டல பிரபாகர் ரெட்டி 10,113 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளரை வென்றார். முந்தைய தேர்தலில் இத்தொகுதியில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சி இம்முறை 3வது இடமே பிடித்தது. 7 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றிருந்த 2 தொகுதிகளில் தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா கட்சி வேட்பாளர் ருதுஜா லட்கே 66,530 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். உபி கோலா கோக்ரன்நாத் தொகுதியையும், ஒடிசாவின் தாம்நகர் தொகுதியையும் பாஜ கைப்பற்றியது. இவ்விரு தொகுதிகளிலும் முந்தைய தேர்தலிலும் பாஜவே வென்றிருந்தது.*நோட்டா 2ம் இடம்மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி ருதுஜா லட்கே உத்தவ் தரப்பு சிவசேனா தரப்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜ வேட்பாளரை அறிவித்த நிலையில் பின்னர் வாபஸ் பெற்றது. இதனால் 6 சுயேச்சைகள் மட்டுமே எதிர்த்து போட்டியிட்டனர். இதில் 80 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில், ருதுஜா 66,530 வாக்கு பெற்றார். அதன் பின் 2ம் இடத்தை நோட்டா பெற்றது. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நோட்டாவுக்கு மட்டும் 12,806 வாக்குகள் கிடைத்துள்ளன. சுயேச்சைகள் வெறும் 1,500 ஓட்டுகள் மட்டுமே பெற்றனர்….

Related posts

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!