மெட்ரோ ரயில் பணிக்கு பயன்படுத்திய கிரேனை திருடி ஆந்திராவில் விற்ற ஆபரேட்டர் உள்பட 5 பேர் கைது

வேளச்சேரி: மெட்ரோ ரயில் பணிக்காக கொண்டு வரப்பட்ட, கிரேனை திருடி ஆந்திராவில் விற்பனை செய்த ஆபரேட்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேடவாக்கம் மற்றும் வேளச்சேரி மெயின் சாலை பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் ஒப்பந்த முறையில் தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இவர்கள் மெட்ரோ ரயில் தூண்களை அமைப்பதற்காக பெரிய கிரேன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கிரேன்களை வேலை முடிந்தவுடன் இரவு அதே பகுதியில் சாலை ஓரம் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாலை வேலை முடிந்தவுடன் கிரேனை மேடவாக்கம் கூட்டு ரோடு அருகே சாலை ஓரம் நிறுத்தி வைத்தனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்த கிரேனை காணவில்லை. இதுதொடர்பாக, சைட் இன்ஜினியர் ஆனந்தகுமார் (29) பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே, திருட்டுப்போன கிரேன் ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று அந்த கிரேனை மீட்டு விசாரித்தனர். அதில், சம்பவத்தன்று கிரேனை சென்னை எண்ணூர், நேரு நகர், பார்க் தெருவை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் முரளி (43) மற்றும் நண்பர்கள் பட்டாபிராமை சேர்ந்த கார்த்திக் (43), எர்ணாவூரை சேர்ந்த திருநாவுக்கரசு (48) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து திருடி ஆந்திராவிற்கு ஓட்டிச்சென்றுள்ளனர். பின்னர் ஆந்திராவில் கிரேன் வாடகை விடும் தொழில் செய்து வரும் நரசிம்ம ரெட்டி (42) மற்றும் அவரது நண்பர் அணில் குமார் ரெட்டி (25) ஆகியோரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி