மண்டைக்காட்டில் இன்று காலை பரபரப்பு: கடலில் குளித்த 5 பக்தர்களை அலை இழுத்து சென்றது: மீனவர்கள் குதித்து காப்பாற்றினர்

குளச்சல்: மண்டைக்காட்டில் கடல் அலை இழுத்து சென்ற 5 பக்தர்களை மீனவர்கள் கடலில் குதித்து காப்பாற்றினர். மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியை சேர்ந்தவர் வைகுண்டமணி (52). கொத்தனார். அவரது மனைவி சீமா (45). அவர்களது குடும்ப கோயில் திருவிழாவை முன்னிட்டு கடலில் புனித நீர் எடுப்பதற்காக இன்று காலை மண்டைக்காட்டுக்கு வந்தனர். இவர்களுடன் அதே ஊரை சேர்ந்த ஹரிகோபால் மனைவி விஜயா (45) மற்றும் அவரது பிள்ளைகள் ஆஷிகா (18), ஆஷா(20) ஆகிய 5 பேரும் வந்தனர். இவர்கள் 5 பேரும் கடலில் புனித நீர் எடுப்பதற்கு முன்பு கடலில் இறங்கி குளித்து மண்டைக்காடு கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

ஆகவே 5 பேரும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை 5 பேரையும் இழுத்து சென்றது. உடனே அவர்கள் கூக்குரலிட்டனர். இதை கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த புதூர் மீனவர்கள் ஜோசப், ஜோனி, மர்சலின், அந்தோணி, கபிரியல் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் மின்னல் வேகத்தில் கடலில் குதித்து 5 பேரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்ககு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் இன்று காலை மண்டைக்காட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தக்க சமயத்தில் கடலில் குதித்து 5 பேரையும் உயிருடன் காப்பாற்றிய புதூர் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் கடலலையில் சிக்கி மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதூரில் பாதியில் நிற்கும் தூண்டில் வளைவை சீரமைத்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று மீனவர்கள் கூறினர்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்