நிர்வாகிகள் மாற்றத்தின் போது இளைஞர் காங்கிரசாருக்கு 50% பதவி: செல்வப்பெருந்தகை பேட்டி


சென்னை: தமிழக இளைஞர் காங்கிரசின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வைசாக், சாகரிக்க ராவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழக இளைஞர் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய மேலிட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

மேலும் தமிழகத்தில் இளைஞர் காங்கிரசை எவ்வாறு வலுப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது மற்றும் ஒன் பூத் 10 யூத் எனும் திட்டத்தில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் மாற்றி அமைக்கும் போது, ஏறக்குறைய 50 சதவீதம் இளைஞர் காங்கிரசாருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். யாரெல்லாம் இளைஞர் காங்கிரசில் சிறப்பாக பணியாற்றி சிறந்த பெயரை பெற்றிருக்கின்றார்களோ அவர்களை தேர்ந்தெடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்.

ராகுல் காந்தி குறித்து விமர்ச்சித்து பேசுபவர்களை இனிவரும் காலங்களில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு போராட்டங்களை நடத்த இருக்கின்றோம். பாஜகவினருக்கு முதலில், ராகுல் காந்தி என்ன பேசுகிறார் என்பது புரிய வேண்டும். புரிந்த பிறகு அவர்கள் பேசினால் பதில் அளிக்கலாம். புரியாதவர்களுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த மாஜி அமைச்சர் பவன் கட்சியில் ஐக்கியம்

வடலூர் வள்ளலார் பெருவெளி சைட் ‘பி’யில் மருத்துவமனை கட்ட ஐகோர்ட் அனுமதி!!

எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!