ஜூன் முதல் வாரத்தில் 500 மருத்துவமனைகளை முதல்வர் திறக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அவனியாபுரம்: ஜூன் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் 500 மருத்துவமனைகளை ஒரே நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மதுரை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறை துணை பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 8 மருத்துவர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் மீதான தவறு உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனை டீன் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி 4,308 பணியிடங்களில் ஆட்கள் விரைவில் நியமிக்கப்படுவர். அதேபோல் 1,900 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே அவர்களும் விரைவில் நியமிக்கப்படுவர். மதுரையில் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 708 மருத்துவமனைகள் கட்டப்பட்டு வந்தன.

இவற்றில் 500 மருத்துவமனைகளின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. இம்மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே முதல்வர் ஜூன் முதல் வாரத்தில் 500 மருத்துவமனைகளையும் ஒரே நேரத்தில் திறந்து வைப்பார். இவ்வாறு கூறினார்.

Related posts

ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்தனர் கோடாரி, கற்களால் சரமாரி தாக்கிய 3 பேர் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,902 லிட்டர் மதுபாட்டில்கள் ஜேசிபி மூலம் நசுக்கி அழிப்பு

தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு ஒவ்வொரு தோட்டாவும் இலக்கை நோக்கி விழும் வகையில் சுட வேண்டும்