கரூர் அருகே அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து 500 பக்தர்கள் நேர்த்திக்கடன்

கிருஷ்ணராயபுரம்: கரூர் அருகே மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வைபவம் இன்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில்  மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்குக்கு மறுநாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். வேண்டுதலை மனதில் நினைத்து, தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டால் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எனவே கரூர் மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், நாமக்கல், சேலம், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வேண்டிக்கொள்பவர்கள், வேண்டுதல் நிறைவேறியவர்கள் இக்கோயிலுக்கு வந்து தலையில் தேங்காய் உடைத்துக்கொள்வார்கள். இதற்காக ஆடி 1ம் தேதியில் இருந்தே காப்புக்கட்டி விரதம் இருப்பார்கள். இந்தாண்டு ஆடி பதினெட்டான நேற்று கோயிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடந்தது. தலையில் தேங்காய் உடைக்கும் வைபவம் இன்று காலை 9.30 மணியளவில் துவங்கியது.

இதற்காக அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோயிலுக்கு வர துவங்கினர். கோயிலுக்கு முன் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன்பின் கோயில் பூசாரி சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஒவ்வொருவரின் தலையிலும் வரிசையாக தேங்காய் உடைத்து சென்றார். இதில் சிலர் மொட்டை போட்டு அமர்ந்திருந்தனர். அவர்களது தலையிலும் தேங்காய் உடைக்கப்பட்டது. இவ்வாறு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேங்காய் உடைத்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related posts

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை