மண்ணில் புதைத்த கேன்களில் இருந்த 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: கலால்துறை அதிகாரிகள் அதிரடி

பாலக்காடு: பொள்ளாச்சி அடுத்த செம்ணாம்பதி அருகே மாந்தோப்பில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 950 லிட்டர் எரிசாராயத்தை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓணம் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு போதைப்பொருட்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்துவது அதிகளவில் நடப்பதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கேரள-தமிழக எல்லை சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள ஆனைக்கட்டி, வாளையார், முள்ளி, வேலந்தாவளம், கோபாலபுரம், ஒழலப்பதி, மீனாட்சிபுரம், நடுப்புணி, எல்லைப் பெட்டான்கோவில், செம்ணாம்பதி ஆகிய இடங்களில் கேரள கலால்துறை அதிகாரிகள் திவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி எல்லையில் கேரளா செம்ணாம்பதியில் கலால்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது செம்ணாம்பதி அருகே மாந்தோப்பில் மண்ணுக்குள் எரிசாராயம் புதைத்து வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மாந்தோப்புக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில், மாந்தோப்பில் மண்ணில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 150 கேன்களில் 4 ஆயிரத்து 950 லிட்டர் எரிசாராயம் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து மாந்தோப்பு பொள்ளாச்சி அருகே தமிழக எல்லைக்கு உள்பட பகுதியில் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். எரிசாராயம் பதுக்கிய மர்ம நபர்களை கலால் துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி