50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 20 கோடி அரசு நிலம் அதிரடி மீட்பு: வருவாய் துறையினர் நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பிச்சிவாக்கம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், அதே அகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், இந்த ஏரியை ஒட்டி சுமார் 56 ஏக்கர் பரப்பளவு புறம்போக்கு நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு, தொடர்ந்து புகார்கள் சென்றன. இதைய ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வருவாய் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சிவாக்கம் ஏரியில் ஆய்வு நடத்தினர். இதில், ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 50 ஆண்டுகளாக ஏரியை ஆக்கிரமித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின்படி, பெரும்புதூர் ஆர்டிஓ சைலேந்திரன் தலைமையில், வருவாய் துறையினர் நேற்று சம்பவ இடத்துக்கு சென்றனர்.அங்கு, பொக்லைன் இயந்திரம் மூலம், பயிர்களை அகற்றி, சுமார் 56 ஏக்கர் அரசு விவசாய நிலத்தை மீட்டனர். இதன் மூலம், இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள 100 விவசாய நிலங்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ₹20 கோடி என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், நீர்நிலைகளில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த நிலங்களை மீட்குமாறு, கலெக்டர் ஆரத்தி உத்தரவிட்டார். அதன்பேரில், வருவாய்த்துறையினர் மாவட்டம் முழுவதும், ஏரி, குளம் உள்பட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையொட்டி, அதிகாரிகளின் ஆய்வில், வாலாஜாபாத் வட்டம் புத்தாகரம் கிராமத்தில் உள்ள குட்டை, புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, வீடுகள், கடைகள் கட்டப்பட்டு இருந்தது தெரிந்தது.இதையடுத்து, வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நீர்நிலை, புறம்போக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, வருவாய்த்துறை ஊழியர்கள் துணையுடன் நேற்று அதிரடியாக அகற்றினார். இதன்மூலம், 1.10 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ₹20 லட்சம் என கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள குடிசைவாசிகளுக்கு வேறு இடத்துக்கு செல்ல கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வட்டாட்சியர் லோகநாதனிடம் கேட்டபோது, வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கிராமங்களில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இந்த பணி தொடரும் என்றார்….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு