5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்; ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு: முதல்கட்ட பணிகள் தீவிரம்

திருச்சி: குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கர்நாடகா தண்ணீர் தராதது, பருவமழை பொய்த்தது ஆகிய காரணங்களால் 8 ஆண்டுகள் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பாதித்தது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் 12ல் அணை திறக்கப்பட்டு, குறுவை சாகுபடி வழக்கம்போல் நடந்தது. இந்தாண்டும் ஜூன் 12ல் பாசனத்துக்கு அணை திறக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அணையில் நேற்றைய நிலவரப்படி 97.52 (61.67 டிஎம்சி) அடி தண்ணீர்  உள்ளது. இந்த நீர், 50 நாள் பாசனத்துக்கு போதுமானதாக இருக்கும். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஜூன் 1ல் தொடங்கும். இது இயல்பான அளவு பொழியும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு தஞ்சை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது. அதே அளவு இந்த முறையும் நடைபெற உள்ளது. இதுதவிர புதுகை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களையும் சேர்த்து சுமார் 5 லட்சம் ஏக்கரில் நடப்பாண்டு குறுவை சாகுபடி நடைபெற உள்ளது. இதில் 2 லட்சம் ஏக்கர், பம்பு செட் நீரை பயன்படுத்தி சாகுபடி நடைபெறும். இதனிடையே டெல்டா மாவட்டங்களில் தற்போது பம்பு செட் நீரை பயன்படுத்தி, சுமார் 80,000 ஏக்கரில் சாகுபடி துவங்குவதற்கு நாற்று விடப்பட்டுள்ளது. இதுதவிர பல இடங்களில் எரு அடித்தல், கோடை உழவு உள்ளிட்ட முதல்கட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர். மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கடந்த 16ம் தேதி தஞ்சையில் நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் அணை திறப்பு, தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் அணை திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கடைமடை வரை செல்ல ஏதுவாக ஆறு, வாய்க்கால்களை 3,859 கிமீ தூரத்துக்கு தூர்வார ரூ.62 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இதுபற்றி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், தற்போது அணையில் உள்ள தண்ணீர் குறுவை பாசனத்துக்கு போதுமானது. மழையும் வழக்கமான அளவு பொழியும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலையில் 31.24 டிஎம்சி, ஆகஸ்டில் 45.95 டிஎம்சி நீர், கர்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டும். அதை தமிழக அரசு கேட்டு பெற வேண்டும். அணை திறப்புக்கான தேதியை அரசு விரைந்து அறிவித்தால், ஆற்றுப்பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள், முதல் கட்ட பணிகளை துவக்க ஏதுவாக இருக்கும். இப்போது சாகுபடி பணிகளை துவக்கினால், அக்டோபரில் பருவமழை துவங்குவதற்கு முன் அறுவடை செய்து விடலாம். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்….

Related posts

கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை..!!

கோவையில் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு..!!

நாளை ஆடிப்பெருக்கு தினத்தில் படித்துறை இல்லாத காவிரி, கொள்ளிடம் கரையோரத்தில் நீராடத் தடை: திருச்சி ஆட்சியர்