5 ஆண்டுகளாக இருந்து வந்த கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு; சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

5 ஆண்டுகளாக இருந்து வந்த கூட்டுறவு சங்கங்களின் பதவி காலம் 3 ஆண்டாக குறைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பல புகார்கள் வரப்பெற்றுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதில் அதிகளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் கோடிக்கணக்கில் போலி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது போன்றவை வெளிக்கொணரப்பட்டுள்ளன. எனவே கூட்டுறவு சங்கங்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் அதன் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும், முறையான ஆளுகையை உறுதி செய்யவும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவும், கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர்களின் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் வகையில் ஒரு சட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 1983ம் ஆண்டில் கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் இருக்கும் சில வகை முறைகளை மீட்டெடுக்கவும் அரசானது முடிவு செய்துள்ளது. அதை செயல்படுத்தும் வகையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, ‘கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்கும் சட்ட திருத்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே அவையில் இருந்த உறுப்பினர்களை கணக்கில் கொண்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் தற்போது கூட்டுறவு சங்கங்களின் பொறுப்புகளில் இருப்பவர்களின் பதவிக்காலம் தானாக முடிவுக்கு வருகிறது. ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்