5 மாதத்தில் 60 படங்கள் ரிலீஸ் வெறும் ரூ.28 கோடி வசூல்

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு தியேட்டர்கள் திறந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில் 60 தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. இந்த படங்கள் மூலம் வெறும் ₹28 கோடி மட்டும் வசூலாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் உள்பட திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு துவங்கியதும் மார்ச் மாதத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. 8 மாதங்களாக மூடிக்கிடந்த தியேட்டர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. அப்போது வெறும் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 62 படங்கள் வெளிவந்த நிலையில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெறும் 18 படங்களே திரைக்கு வந்தன. அதிலும் 50 சதவீத இருக்கைகள் மட்டும்தான் நிரப்பலாம் என கூறப்பட்டாலும் கொரோனா பயம் காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வரவில்லை. இதனால் வெறும் 10 சதவீத ரசிகர்களே தியேட்டர்களுக்கு வரும் அவல நிலை காணப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9 படங்கள் (மாஸ்டரை தவிர்த்து) திரைக்கு வந்தன. பிப்ரவரி 1ம் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த மாதத்தில் அதிகபட்சமாக 20 படங்கள் ரிலீசாகின. மார்ச்சில் இதுவரை 13 படங்கள் வெளிவந்துள்ளன. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நவம்பரிலிருந்து மார்ச் 20ம் தேதி வரை தியேட்டர்களில் 60 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் விஷால் நடித்த சக்ரா, ஜீவா, அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம், சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகியவை ₹5 கோடி முதல் ₹8 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான படங்கள். இதையடுத்து சந்தானம் நடித்த பிஸ்கோத், பாரீஸ் ஜெயராஜ், சிபிராஜ் நடித்த கபடதாரி, விஜய் சேதுபதி நடித்த குட்டி ஸ்டோரி, சமுத்திரக்கனி நடித்த ஏலே, புதுமுகங்கள் நடித்த இரண்டாம் குத்து, செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ₹5 கோடிக்குள்ளான பட்ஜெட்டில் உருவானவை. இந்த பத்து படங்கள் மட்டுமே சராசரியாக ரூ.59 கோடிக்குள் உருவாகியுள்ளது. ஆனால் இந்த பத்து படங்களுமே எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதில் பல படங்கள் ஓடிய தியேட்டர்களில் வெறும் தலா 10 பேர் ஒரு காட்சிக்கு அமர்ந்திருந்த அவலம் எல்லாம் நடந்துள்ளது. 10க்கும் குறைவாக ரசிகர்கள் வந்த படங்களின் காட்சிகள் பலமுறை ரத்து செய்யப்பட்டது. இந்த பத்து படங்களில் பல படங்களுக்கு ஒரு காட்சிக்கு வெறும் ரூ.700, ரூ.800 என வசூலான கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது. கொஞ்சம் பிரபலமான ஹீரோக்கள் நடித்த இந்த படங்களுக்கே இந்த கதி என்றால், சிறு பட்ஜெட்டில் உருவான புதுமுகங்களின் மற்ற படங்களின் கதியை சொல்ல வேண்டியதில்லை. ‘லாக்டவுனுக்கு பிறகு சராசரியாக 60 படங்கள் வரை வெளிவந்துள்ளன. இந்த படங்கள் மூலம் ரூ.28 கோடிதான் வசூலாகியுள்ளதாக டிரேட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலை நீடித்தால் தியேட்டர்கள் மூடும் சூழ்நிலைதான் உருவாகும்’ என திரைப்பட மூத்த வினியோகஸ்தர் ஒருவர் கூறினார்.மேலே குறிப்பிட்ட பத்து படங்களை தவிர்த்து மற்ற 50 சிறிய படங்களும் ரூ.2 கோடியிலிருந்து ரூ.4 கோடி பட்ஜெட்டுக்குள் உருவானவை. அந்த படங்களுக்கு போட்ட பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சிகர உண்மை. இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும். மக்கள் இப்போதே தங்களது கவனத்தை ஓடிடி பக்கம் திருப்பிக் கொண்டுள்ளனர். கொரோனா பயம் முற்றிலும் நீங்கினாலும் தியேட்டர்களுக்கு வந்து ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவு செய்ய அவர்கள் தயாராக இல்லை. இதனால் ஓடிடியிலே படம் பார்க்கும் மனநிலைக்கு மக்கள் மாறியுள்ளனர். இதனால் பெரிய ஹீரோக்களின் பெரிய படங்கள் மட்டும் ஓரளவுக்கு தியேட்டரில் ஓடலாம் என சொல்லப்பட்டாலும், ஒருவேளை அந்த படம் தோல்வி அடைந்தால் முதல் நாளிலேயே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு உதாரணமாக பல பெரிய படங்களை சொல்லலாம். அதனால் இப்போது ரூ.20 கோடியில் எடுக்கும் ஒரு படமே ரூ.200 கோடியில் எடுப்பது போன்ற சூழ்நிலை தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நிலைகுலைவும் ஒரு காரணம். இதனால் பெரிய நடிகர்கள், தங்களது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையில் ஆழ்ந்து போயுள்ளனர். பெரிய நடிகர்களின் நிலையே அப்படியென்றால் இளம் நடிகர்கள் இப்போது அதிக பயத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். தயாரிப்பாளர்களின் நிலையும் மோசம் அடைந்து வருகிறது. ரூ.2 கோடியில் எடுத்த படத்துக்கும் லாபமில்லை, ₹10 கோடியில் எடுத்த படத்துக்கும் லாபமில்லை என்பதால் அவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். பேசாமல், ‘என்ஜாய் எஞ்சாமி’ போல் யூடியுப்புக்கு இசை ஆல்பமோ அல்லது குறும்படங்களோ செய்து லாபம் பார்க்கலாமா என்ற மனநிலைக்கு பல தயாரிப்பாளர்கள் வந்துவிட்டனர். இதனால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் மாபெரும் கேள்விக்குறியாகியுள்ளது.எத்தனை கோடி நஷ்டம்?ஸ்டார் நடிகர்களின் படங்ளை தவிர்த்து வழக்கமாக தமிழ் சினிமாவில் 60 படங்கள் வெளியாகும்போது, அதன் மூலம் ₹100 கோடி முதல் ₹120 கோடி வரை வசூல் இருக்கும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி பார்க்கும்போது, கடந்த 5 மாதத்தில் வெறும் ₹28 கோடி மட்டுமே வசூல் ஆனதால் நஷ்டம், ₹72 கோடி முதல் ₹92 கோடி வரை உள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு பெரும் சறுக்கலாகும்.50%இருந்தபோது…தியேட்டர்களில் கடந்த நவம்பர் முதல் இந்தாண்டு ஜனவரி வரை 50% பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர். அப்போது மொத்தம் 27 படங்கள் திரைக்கு வந்தன. இந்த படங்கள் மூலம் ரூ.15 கோடி மட்டுமே வசூல் வந்துள்ளது100%ஆனதும்…பிப்ரவரி முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் தியேட்டர்களில் கூட்டம் வரவில்லை. இந்த இரு மாதங்களில் இதுவரை 33 படங்கள் திரைக்கு வந்துள்ளன. இப்படங்கள் மூலம் வெறும் ₹13 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது.பலே ஓடிடிதியேட்டருடன் ஒப்பிடும்போது, ஓடிடியில் ெவளியிடப்பட்ட படங்கள் தயாரிப்பாளர்களுக்கு அதிகம் லாபத்தை தந்துள்ளது. சூர்யாவின் சூரரைப்போற்று படம் ரூ.15 கோடியில் உருவானது. இந்த படம் ஓடிடியில் ரூ.40 கோடிக்கு விலைபோனது. நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம், ரூ.8 கோடியில் உருவானது. இந்த படத்தை ரூ.25 கோடிக்கு ஓடிடி நிறுவனம் வாங்கியது. விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம் படம் ரூ.8 கோடியில் உருவானது. இந்த படம் ரூ.27 கோடிக்கு ஓடிடியில் விற்பனையானது. இதுபோல் மேலும் சில சிறு படங்களும் ஓடிடியில் வெளியாகி லாபம் பார்த்துள்ளன.மாஸ்டரை தவிர்த்துநவம்பர் முதல் தற்போது வரையிலான தியேட்டர் வசூல் மற்றும் படங்களின் எண்ணிக்கை ஆகிய இந்த ஆய்வு, மாஸ்டர் படத்தை தவிர்த்து செய்யப்பட்டுள்ளது.‘இந்த நிலை மாறும்’தயாரிப்பாளர் டி.சிவா கூறும்போது, ‘கொரோனா பயம் மக்களை விட்டு போகவில்லை. குடும்ப ஆடியன்ஸ் தியேட்டருக்கு வராததுதான் படங்கள் ஓடாததற்கு காரணம். இப்போது தடுப்பூசி வந்திருக்கிறது. அதை போட்டால் கொரோனா வராது என்ற நம்பிக்கை வரும்போது, பழைய நிலை திரும்பும். ஆனால் அதற்கு நேரமாகும். அதுவரை தமிழ் சினிமாவின் நிலை இப்படித்தான் இருக்கும். ஆனால் சினிமா அழிக்க முடியாத மீடியா என்பது நிஜம்’ என்றார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு