தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை ராணுவ கேப்டன் உட்பட 4 வீரர்கள் வீரமரணம்: காஷ்மீரில் 3 வாரத்தில் 3வது என்கவுன்டர்

ஜம்மு: காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு வீரர்கள் தோடா மாவட்டத்தில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள தேசா வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் கேப்டன் பிரிஜேஷ் தாபா மற்றும் வீரர்கள் நாயக் டி ராஜேஷ், பிஜேந்திரா மற்றும் அஜய் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். தோடா மாவட்டத்தின் வனப்பகுதியில் கடந்த 3 வாரத்தில் நடத்திருக்கும் 3வது பெரிய என்கவுன்டர் சம்பவம் இது.

உயிர்த்தியாகம் செய்த 4 வீரர்களுக்கும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மற்றும் அனைத்து தரப்பு வீரர்களும் அஞ்சலி செலுத்தினர். தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், எங்கள் வீரர்களின் மரணத்திற்கு பழிவாங்குவோம். என்று குறிப்பிட்டுள்ளார். இந்த என்கவுன்டர் சம்பவத்தை தொடர்ந்து தோடா வனப்பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நேற்று நடந்தது. கண்காணிப்பு பணியில் ஹெலிகாப்டர், டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக பதுங்கியிருந்த தீவிரவாதிகள், அடர்ந்த வனத்திற்குள் தொடர்ந்து பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை