4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி: ஐநா தலைமையகத்தில் இன்று யோகா தின விழாவில் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி முதல் முறையாக 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின விழாவில் மோடி பங்கேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். இதற்கு முன் 7 முறை மோடி அமெரிக்கா சென்றாலும், இதுவே அவரது முதல் அரசு முறை பயணமாகும். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 7.15 மணிக்கு புறப்பட்ட மோடி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி அளவில் நியூயார்க்கின் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனது பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இன்று நடக்கும் 9வது சர்வதேச யோகா தின விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் மோடியுடன் ஏராளமான பிரபலங்கள் பொதுமக்கள் யோகா செய்ய உள்ளனர். பின்னர் வாஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனை சந்திக்கவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2வது முறையாக உரையாற்ற உள்ளார். அமெரிக்க நிறுவன சிஇஓக்களையும், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்திப்பது என பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அமெரிக்கா புறப்படும் முன்பாக அவர் தனது பயணம் குறித்து டிவிட்டரில், ‘‘அமெரிக்காவில் வணிகத் தலைவர்களைச் சந்திக்கவும், இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்ளவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனைத் தலைவர்களைச் சந்திக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். வர்த்தகம், புத்தாக்கம், தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா உறவுகளை நாங்கள் ஆழப்படுத்த விரும்புகிறோம்” என பதிவிட்டார். அமெரிக்காவில் பிரதமர் மோடியை வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

* எலான் மஸ்க்கை சந்திக்கிறார்
அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக டெஸ்லா மற்றும் டிவிட்டர் நிறுவன உரிமையாளரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேச உள்ளார். இதில் இந்தியாவில் டெஸ்லா பேட்டரி கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 24 சிந்தனையாளர்களையும் மோடி சந்திக்கிறார். வானியல் இயற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் ரோமர், முதலீட்டாளர் ரே டாலியோ, லெபனான் அமெரிக்க கட்டுரையாளர் நிக்கோலஸ் நாசிம் தலேப், மற்றும் ஃபாலு ஷா, ஜெப் ஸ்மித், மைக்கேல் ப்ரோமன், டேனியல் ரஸ்ஸல், எல்பிரிட்ஜ் கோல்பி, டாக்டர் பீட்டர் அக்ரே, டாக்டர் ஸ்டீபன் கிளாஸ்கோ, சந்திரிகா டாண்டன் உள்ளிட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு விவரங்களை அறிவித்துள்ளார் மாணவர் சேர்க்கை செயலாளர்