ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் 8 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கணக்கில் வாரமல் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி பணத்துடன் பிடிபட்ட ஓட்டல் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட 3 பேர், தேர்தல் செலவுக்காக பாஜ சார்பில் போட்டியிடும் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நேற்று காலை 10.30 மணிக்கு சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர் பால்கனகராஜ் உடனிருந்தார். பின்னர் விசாரணை அதிகாரிகள், நயினார் நாகேந்திரனிடம் கடந்த மார்ச் 26ம் தேதி அவரது ஓட்டல் மேலாளர் சதீஷ் அளித்த வாக்குமூலத்தின் படி ரூ.4 ேகாடி பணம் தேர்தல் செலவுக்காக கொண்டு சென்றதாக கூறியுள்ளார்களே, பணம் உங்களுடையது இல்லை என்றால் ஏன் பாஜ நிர்வாகிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்றம் நாடுகின்றனர்.

பாஜ பிரமுகர் கோவர்த்தனின் விடுதியில் இருந்து பணம் கொண்டு வந்ததற்கான சிசிடிவி உள்ளதேஎன 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அதிகாரிகள் நயினார் நாகேந்திரனிடம் கேட்டனர். ஆனால் எல்லா கேள்விக்கும், எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றே நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விசாரணை காலை 10.30 முதல் மாலை 6.20 வரை 8 மணி நேரம் நடந்தது. சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி பணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என தெரிவித்துவிட்டேன். நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். யாரோ கொண்டு வந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை’’ என்றார்.

Related posts

காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை அணிய வேண்டும் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

மதுரையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. 2017-2021 வரை திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?: ஐகோர்ட் கேள்வி!!