ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 4 நாடுகள் பங்கேற்பு; இந்தியாவில் அக்டோபரில் கடற்படை கூட்டு பயிற்சி: பாதுகாப்பு துறை தகவல்

புதுடெல்லி: ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்குபெறும் ஒருங்கிணைந்த மலபார் பயிற்சி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடக்க இருப்பதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மலபார் ராணுவ பயிற்சியானது கடந்த 1992ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையே கூட்டு பயிற்சியாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2015ம் ஆண்டு ஜப்பானும், 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் அந்த கூட்டணியுடன் சேர்ந்தது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த 4 குவாட் நாடுகளும் இணைந்து இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலில் ஒருங்கிணைந்த மலபார் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த பயிற்சியின் போது 4 நாடுகளும் சேர்ந்து போர் நடவடிக்கைகள் மற்றும் கடல் சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும். கடந்த 2022ம் ஆண்டு ஜப்பானும், 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் மலபார் பயிற்சியை நடத்தின. இந்நிலையில் இந்த ஆண்டு ஒருங்கிணைந்த மலபார் பயிற்சியை இந்தியா வருகிற அக்டோபர் மாதம் வங்காள விரிகுடாவில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் பகுதியில் தனது கடற்படை பலத்தை அடிக்கடி வெளிக்காட்டி வரும் சீனா, இந்திய பெருங்கடலில் காலூன்றி தனது எல்லையையும் விரிவுபடுத்தி வருகிறது.

இதனால் சீனாவுடன் பகையை வளர்க்காமல் இருப்பதற்காகவே இந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் மலபார் பயிற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘இந்த ஆண்டு பயிற்சியின் போது எதிரி நாட்டு விமான ஊடுருவல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதலை தடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் இந்த பயிற்சியில் 5வது நாட்டை சேர்க்கும் எண்ணம் தற்போது இல்லை’’ என்றார்.இதனிடையே வருகிற ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டாக சேர்ந்து ‘தரங் ஷக்தி’ என்ற வான் படை பயிற்சியில் ஈடுபடுகின்றன. குவாட் நாடுகளுடன் சேர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் வான் படையும் இந்த பயிற்சியில் அங்கம் வகிக்கிறது. மேலும் 6000 டன் எடை கொண்ட இந்தியாவின் மிகப் பெரும் போர் கப்பலான ‘ஐஎன்எஸ் ஷிவாலிக்’ ஹவாய் பேர்ல் ஹார்பரில் நடைபெற உள்ள உலகின் மிகப் பெரிய கப்பற்படை பயிற்சியான ரிம்பேக் பயிற்சியில் பங்கு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணி!

கடலூரில் 72 கிலோ பிள்ளையார் லட்டு; 15 பேர் 3 நாட்களில் உருவாக்கினர்: பொதுமக்கள் வழிபாடு!

மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!