சென்னை உயர்நீதிமன்றதில் மேலும் 4 நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வரும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால், ஏற்கனவே தலைமை பதிவாளர்களாக பணியாற்றிய சக்திவேல், சி.குமரப்பன், தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக பணியாற்றிய ராஜசேகர் ஆகிய இந்த நான்கு பேரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. நீதிபதிகள் தனபால், சக்திவேல், குமரப்பன், ராஜசேகர் ஆகியோர் ஐகோர்ட் நீதிபதிகளாக பதவி ஏற்றனர். 4 பேருக்கும் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.

* நீதிபதி பி.தனபால்: கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். தந்தை பப்புசாமி, தாய் பழனியம்மாள். கருரில் பள்ளி படிப்பை முடித்து கரூர் அரசு கலை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து திருச்சி சட்ட கல்லூரியில் சட்டம் படித்தார்.

* நீதிபதி ஆர்.சக்திவேல்: கரூர் மாவட்டம் வாங்கலைச் சேர்ந்தவர். பெற்றோர் ராமசாமி-வேப்பாயி. 1973ல் பிறந்த இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 1997ல் சட்டப்படிப்பை முடித்தார்.

* நீதிபதி சி.குமரப்பன்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். தந்தை சின்னசாமி, தாய் திலகம். குன்றக்குடி வள்ளல் பாரி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து கோவையில் சட்டக் கல்லூரியில் 1996ல் சட்டப் படிப்பை முடித்தார்.

* நீதிபதி கே.ராஜசேகர்: 1973ல் பிறந்த இவர் 1998ல் சட்டப் படிப்பை முடித்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். நேரடி தேர்வு மூலம் 2011ல் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். சென்னை தொழிலாளர் தீர்ப்பாய தலைவராகவும், அதன்பிறகு திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், பின்னர் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கோவை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை