499 நிரந்தர செவிலியர் காலி பணியிடத்தில் ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று தகவல் கோரல் அடிப்படையில், சென்னையில் ஒப்பந்த செவிலியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), வானதி சீனிவாசன் (பாஜக), ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.மணி (பாமக), பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது: டி.பி.எச்., டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று காலை சுமார் 300 செவிலியர்கள் நுழைந்து போராட்டம் நடத்தினர். செவிலியர் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து சுகாதாரத்துறையின் செயலாளர் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து நேற்று இரவு (10ம்தேதி) தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து செவிலியர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். தற்போது, 47 ஆயிரத்து 938 செவிலியர்கள் இருக்கிறார்கள். 2015, 2016, 2017ம் ஆண்டுகளில் 12 ஆயிரத்து 797 ஒப்பந்த செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். சொந்த மாவட்டங்களில் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் ஒப்பந்த செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

499 நிரந்தர செவிலியர் காலி பணியிடத்துக்கும் இந்த ஒப்பந்த செவிலியர்களிலேயே விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர். கூடுதல் செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதற்கும், நிரந்தர காலிப் பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நியமிப்பதற்கும், நிதித் துறையிடம் கலந்து பேசி, மகப்பேறு விடுப்பு, பணப் பயன்களைப் பெற்றுத் தருவதற்கும், ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியமான ரூ.18,000த்துடன் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் 5 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். நிச்சயமாக, எதிர்காலத்தில் அவர்களுடைய கோரிக்கை செவிமடுக்கப்படும்.

Related posts

ராசிபுரம் அருகே பயங்கரம் மாயமான இளம்பெண் எரித்துக்கொலை

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்ததால் பரபரப்பு..!!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐபேட்களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு!!