தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 4,497 மாணவர்கள் பயன்

*கலெக்டர் லட்சுமிபதி தகவல்

செய்துங்கநல்லூர் : தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 4,497 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் நடந்த திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்தார்.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை கோவையில் நடந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே கிள்ளிகுளம் வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் அட்டையை வழங்கினர். அப்போது கலெக்டர் லட்சுமிபதி பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக்கல்வியை நிறைவு செய்கிறார்கள். இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் மிகப்பெரிய சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேலும் வளர்க்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரியில் 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் வழக்கமாக கல்லூரிகளில் சேரும் மாணவிகளை விட கடந்த ஆண்டில் கூடுதலாக கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, அரசுப்பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மணவர்கள் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 58 கல்லூரிகளில் பயிலும் 4,497 மாணவர்கள் பயனடைவார்கள்’ என்றார்.

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா பேசுகையில், ‘தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கல்வி மற்றும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான திட்டங்களை தினந்தோறும் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்வர் கல்விக்காக எடுக்கும் முயற்சிகளினால் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழக அரசு திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி உலக அளவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை வெளி கொண்டு வர வேண்டும். அதற்கு மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு எத்தகைய உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது’ என்றார்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர் தேரடி மணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவி பிரம்மசக்தி, மாட்ட வருவாய் ஆய்வாளர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், கல்லூரி மாணவர் ஆலோசகர் மன்ற சீனிவாசன் சுப்பையா, கருங்குளம் யூனியன் பிடிஒக்கள் முத்துக்குமார், அரவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ்காந்தி, வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னேற முயற்சி செய்… வெற்றி வசப்படும்!

உண்ணத் தகாத வண்ண உணவு

சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் கைது!