434 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்து கொள்ளலாம்

 

கடலூர், மே 8: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் மழை பருவத்திற்கு முன்பாக ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்படுவது வழக்கம். அதுபோல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். நீர்நிலைகளை தூர் வாரி அதிலுள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதால் நீர்நிலைகளில் மழை நீர் சேமிப்பு திறன் பாதுகாக்கப்படுகிறது. மண்வளம் மேம்படுவதுடன், நிலத்தடி நீர் அதிகமாகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் சேர்ந்துள்ள வண்டல் மண், களிமண் போன்ற ஏனைய சிறு கனிமங்களை பொதுமக்கள் தங்களது பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துக்கொள்ள தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதன்படி மாவட்டத்தில் 434 நீர் நிலைகளில் சேர்ந்துள்ள வண்டல் மண், களிமண் போன்ற கனிமங்களை விவசாயிகள் பயன்பாட்டிற்காகவும், பொது பயன்பாட்டிற்காகவும் மற்றும் குயவர்கள் பயன்பாட்டிற்காகவும் எடுத்து கொள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாசில்தாரை அணுகி அனுமதி பெற உரிய படிவத்தில் மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி