நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி; கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

கோவை: நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(65). பிரபல நடிகர் மற்றும் சினிமா டைரக்டர். இவர் அடுத்ததாக ‘டீன்ஸ்’ என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். இந்தநிலையில், நேற்று பார்த்திபன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ஸ்டூடியோ நடத்தி வரும் சிவபிரசாத் என்பவர் டீன்ஸ் படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் (விஎப்எக்ஸ்) பணிகளுக்கு மேற்பார்வை செய்து வந்தார். இந்த பணிகளை பிப்ரவரி மாதத்தில் முடித்து கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

இதற்காக அவருக்கு ரூ.42 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் படத்தின் விஷூவல் பணிகளில் ஒரு பகுதியை மட்டுமே முடித்துள்ளார். அவரிடம் கேட்டபோது மொத்தம் ரூ.88 லட்சம் கேட்டு பணிகளை முடிக்காமல் உள்ளார். நான் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார். கோவை லட்சுமி மில்ஸ் பாரதியார் ரோட்டை சேர்ந்த சிவபிரசாத் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Related posts

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி