இதுவரை 21 பேர் கைது; ஆருத்ரா வழக்கில் 4000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி

சென்னை: ஆருத்ரா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். சென்னையை தலைமையகமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தது. இதை உண்மை என்று நம்பி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் இந்த நிதிநிறுவனத்தில் ரூ.2,438 கோடி முதலீடு செய்தனர்.

ஆனால், சொன்னபடி வட்டி, அசல் ஆகியவற்றை நிறுவனம் தரவில்லை. இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சத்து 9,259 பேரிடம் மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் 4000 பக்க முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா மோசடி வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 40 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3,500 மோசடி புகார்கள் வந்துள்ளன. 526 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 440 முதலீட்டாளர்களிடம் ரூ.13 கோடிக்கு மோசடி புகார் தற்போது பெற்றுள்ளோம். ஐ.எப்.எஸ்.நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜானகி ராமன், ஹேமந்த்குமார் ஆகியோரை கைது செய்துள்ளோம். ஐ.எஃப்.எஸ். நிறுவன மோசடி வழக்கில் ரூ.32 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. ஏ.ஆர்.டி. நிறுவன மோசடி வழக்கில் ஆல்வின் ஞானதுரை, கணேசன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளோம்.

ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மீது 1,850 பேர் மோசடி புகார்கள் தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.குரூப் நிறுவன மோசடியில் 20 புகார்கள் பெறப்பட்டுள்ளன; வழக்கில் ராஜ்குமார், சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஃப்.எஸ். நிறுவன இயக்குனர்கள் வாங்கிய பல சொத்துகள் உள்பட மொத்தம் 132 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தாமாக முன்வந்து புகார்கள் அளிக்கலாம் இவ்வாறு கூறினார்.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்